Published : 28 Aug 2021 03:12 AM
Last Updated : 28 Aug 2021 03:12 AM

பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன: இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி

கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையின் தீவிரம், மூன்றாம் அலை உருவாகலாம் என்ற அச்சம் இவற்றுக்கிடையே நாட்டின் பொருளாதார சூழலை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம்.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களை முடுக்கிவிட வேண்டிய நிர்பந்தம் என பல்முனை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ). நிதிப் பற்றாக்குறை, பணவீக்கம், அந்நியச் செலாவணி நிர்வாகம் என பல்முனை செயல்பாடுகளை மிகவும் அமைதியான முறையில் திறமையாகக் கையாண்டு வருகிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ். நெருக்கடியான சூழலிலும் அதிர்ந்து பேசாத, அதேநேரம் தனது கருத்துகளை, செயல்பாடுகளை மிகவும் தெளிவாக உறுதிபடக் கூறும் அவர், ‘தி இந்து’ பிசினஸ்லைன் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இருந்து சில முக்கிய அம்சங்களைக் காணலாம்.

பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பாக பயணிகள் கார் விற்பனை அதிகரித்து வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் குறிப்பிடத்தக்க அளவுக்கு கணிசமாக உயர்ந்துள்ளது. ரயில்வே சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல அம்சங்களும் அதிகரித்துள்ளன.

இதேபோல உற்பத்தித் துறை குறியீடுகளும் சாதகமான அளவில் உள்ளன. ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தது போலவே பணவீக்கம் மே மாதத்தில் 6.30 சதவீதமாகவும், ஜூன் மாதத்தில் 6.26 சதவீதமாகவும் உள்ளது. இது தொடந்தால் நிர்ணயித்த இலக்கான 5.6 சதவீதத்துக்குள் பணவீக்கம் கட்டுப்படும். பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இலக்காக இருந்த போதிலும், பொருளாதார வளர்ச்சியையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

நிதிச் சந்தையில் போதுமான பணப்புழக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவும் பொருளாதார மீட்சிக்கு வழி வகுத்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச்,ஏப்ரல் மாதங்களில் முடக்கி வைக்கப்பட்ட கடன் பத்திர சந்தைதற்போது திறக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சிக்கான அனைத்து பணப்புழக்க நடவடிக்கைகளும் உரிய நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடனே மேற்கொள்ளப்படுகின்றன.

வரும் காலங்களில் பணவீக்கம்அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்குக் காரணம் சில்லரை வர்த்தகத்தில் நிலவும் விலைவாசி. இதை சரி செய்வதற்காக தேவைக்கேற்ப பொருள் விநியோகம் சீராக இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நிதிக்கொள்கை வெளியிடும்போது நிலைமை சீராக இருந்தது. ஆனால்கரோனா 2-வது அலை தீவிரமானதால் மே 5-ம் தேதி சிலமாற்றங்களை அறிவிக்க வேண்டியிருந்தது. நிதி நிலையை ஸ்திரப்படுத்துவதற்கு சில அறிவிப்பு களை ஆர்பிஐ மேற்கொண்டது.

பாதிக்கப்பட்ட சில துறைகளுக்கு தேவையான ஊக்கம் அளிக்க வேண்டும் என காமத் குழுபரிந்துரை செய்திருந்தது. அதனடிப்படையில் நபார்டு, தேசிய வீட்டு வசதி வங்கி, சிட்பி உள்ளிட்டவற்றில் நிதிப் புழக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே வீட்டுக் கடன் வட்டி குறைவாகவே உள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையும் பிரதான காரணமாகும். தற்போது ரியல் எஸ்டேட் சந்தையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டி வருகிறது.

அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. சரிவைக் கட்டுப்படுத்த அவ்வப்போது ரிசர்வ் வங்கிதலையிட வேண்டியது அவசியமாக உள்ளது.

ரூ.4 லட்சம் கோடி

பணப்புழக்கத்தை அதிகரிக்க மாறுதலுக்குட்பட்ட வட்டி விகிதத்திலான நிர்வாக முறை கடந்தஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து 14 நாட்களுக்கு ஒருமுறை ரூ.2 லட்சம் கோடியை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது 14 நாட்களுக்கு ஒரு முறை ரூ.50 ஆயிரம் கோடி விடுவிக்கப்படுகிறது. இதன்படி செப்டம்பர் இறுதிக்குள் இவ்விதம் விடுவிக்கப்பட்ட தொகை ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும். இதனால் பணப்புழக்கம் பிரச்சினையாக இருக்காது. வங்கிகள்கடன் சீரமைப்பு நடவடிக்கையைமேற்கொண்டாலும் வாராக் கடன்அளவு கட்டுக்குள்தான் உள்ளது.

வேலையிழப்பு அதிகரித்திருக்கும்

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையால் டெபாசிட்தாரர்களுக்கு வங்கி வட்டி விகிதம் குறைந்துள்ளது உண்மையே. பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்காக வட்டி விகிதத்தைக் குறைக்க நேர்ந்தது. அதை மேற்கொள்ளாமலிருந்தால் வேலையிழப்பு அதிகரித்து, பலரது வாழ்வாதாரம் பாதிக்கபட்டிருக்கும். சிறுசேமிப்புகள் மீதான வட்டி அதிகமாகவே உள்ளது. இதற்கு தேவையான உதவியை அரசு மேற்கொண்டுள்ளது. ஷியாமளா கோபிநாத் பரிந்துரைத்த வட்டி அளவைவிட தற்போது அதிகமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

அந்நியச் செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தி வங்கிகளின்மூலதனத்தை அதிகரிக்கச் செய்யலாம் அல்லது கட்டமைப்புத் திட்டப் பணிகளுக்கு செலவிடலாம் என்ற கோரிக்கை இப்போதல்ல வெகு காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்நியச் செலாவணிகையிருப்புத் தொகையானது நடப்புக் கணக்கு உபரியல்ல. இன்னமும் நாம் நடப்புக் கணக்கு பற்றாக்குறை நிலையில்தான் உள்ளோம். நம் நாட்டில் உள்ள அந்நியச் செலாவனி கையிருப்புக்கும், பிற நாடுகளின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

முதலீட்டு பத்திரம் மற்றும் அந்நிய முதலீடுகள் மூலம்அவை திரட்டப்பட்டுள்ளன. இப்போது வரும் அந்நிய முதலீடுகள் வந்த வழியிலேயே திரும்பச் சென்றுவிடும். அதையும் கணக்கில் கொள்ளவேண்டும். உள்நாட்டு நிதிச் சந்தையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களைச் சமாளிக்க எப்போதும் ஆயத்தமாக குறிப்பிட்ட தொகையை இருப்பில் வைத்திருக்க வேண்டியுள்ளது.அமெரிக்க மத்திய வங்கி டாலர் புழக்கத்தை கட்டுப்படுத்தும்போதும், பிற நேரங்களிலும் உள்நாட்டில் ஏற்படும் சூழலை சமாளிக்கஇத்தகைய இருப்பு மிகவும் அவசியம். எனவே அந்த அந்நியச் செலாவணி கையிருப்பைத் தொடா மல் இருப்பதுதான் நல்லது.

கிரிப்டோ கரன்சி வர்த்தகமானது நிதி நிலையை குலைத்துவிடும் அபாயம் உள்ளது. தனியாக புழக்கத்திலிருக்கும் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கும், லெட்ஜர் தொழில்நுட்பம் மூலமான கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

பிளாக் செயின் தொழில்நுட்பமானது ஏற்கெனவே உபயோகத்தில் உள்ளதுதான். கிரிப்டோவர்த்தகத்தில் ஈடுபடுபவரது அனைத்து விவரங்களையும் (கேஒய்சி) பெற்று அதனடிப்படையில் எச்சரிக்கையுடன் அனுமதிக்கலாம் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்பவர்கள்தான் அதில் உள்ள இடர்பாடுகளை உணர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

அரசு பத்திரங்களில் சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த வாய்ப்பு சிறு முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும்.

கரோனா காலம் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதையும் பாதித்துள்ளது. இதில் ரிசர்வ் வங்கிஆளுநராக எடுக்கும் முடிவுகள் சவாலானவைதான். ஆனால் இவைஅனைத்துமே வேலையின் ஒருபகுதிதான் என்று சந்தித்த சவால்களையும் அதைக் கையாண்ட விதத்தையும் புன்னகையுடனே கூறினார் சக்திகாந்த தாஸ்.

- சுரபி, கே.ராம் குமார், தாமஸ் கே தாமஸ், ரகுவீர் ஸ்ரீனிவாசன்

தமிழாக்கம்: எம்.ரமேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x