80 பதக்கம், 40 கோப்பை, 135 சான்றிதழ்கள் பெற்றும் கட்டிட தொழில் செய்யும் சாதனை பட்டதாரி

ரமாவத் சின்னி கிருஷ்ணய்யா
ரமாவத் சின்னி கிருஷ்ணய்யா
Updated on
1 min read

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பாளையம் தாண்டா கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் ரமாவத் சின்னி கிருஷ்ணய்யா (28). பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.

தற்போது கிருஷ்ணய்யா எம்.எட் படிக்கிறார். சிறு வயது முதலே ஊரில் இருக்கும் மலைகளை ஏறி பயிற்சி மேற்கொண்டார். பின்னர், 2017, டார்ஜிலிங்கில் உள்ள 17000 அடி உயரமுள்ள ரீராக் எனும் மலையை ஏறி சாதனை படைத்தார். பின்னர் 2018-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் உள்ள துலியன் பீக் (15 ஆயிரம் அடி), அதே ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ (58 ஆயிரம் மீட்டர்), 2019ம் ஆண்டில் ரஷ்யாவில் உள்ள எல் புர்ஸி (40 ஆயிரம் மீட்டர்) போன்ற மலைகளை சில அமைப்பினரின் நிதி உதவியால் ஏறி சாதனை படைத்துள்ளார். இவர் ஹை ரேஞ்ச் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் கராத்தேவில் கருப்பு பெல்ட், உயரம் தாண்டுதல், ஓட்டப் பந்தயங்களிலும் பல கோப்பைகளை வென்றுள்ளார். இதுவரை இவர் தங்கம், வெள்ளி உட்பட 80 பதக்கங்கள், 40 கோப்பைகள் மற்றும் 135 சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஆந்திர ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந் தன் உட்பட பலரிடம் இவர் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். ஆனால், சரியான வேலை கிடைக்காமல் கட்டிட தொழில் செய்தும், மாங்காய் சீசனில் தெரு ஓரத்தில் தள்ளு வண்டியில் மாங்காய்களை விற்றும் பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், திருப்பதியில் துணை முதல்வர் நாராயணசாமியை சந்தித்து, தனது வாழ்க்கைக்கு உதவும் படி கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in