Last Updated : 27 Aug, 2021 05:52 PM

 

Published : 27 Aug 2021 05:52 PM
Last Updated : 27 Aug 2021 05:52 PM

தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் ரூ.3,429 கோடி; 4 தேசியக் கட்சிகளுக்கு 87%: பாஜக வருமானம் 50% அதிகரிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

2019-20ஆம் ஆண்டில் தேர்தல் நிதிப் பத்திரங்களை அளித்து ரூ.3,429.56 கோடியை அரசியல் கட்சிகள் பெற்றுள்ளன. இதில் பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் மட்டும் 87 சதவீத தொகையைப் பெற்றுள்ளன என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''2019-20ஆம் ஆண்டில் பாஜக தனது ஒட்டுமொத்த வருமானமாக ரூ.3,623.28 கோடி பெற்றதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், அதில் 45.57 சதவீதம் அதாவது ரூ.1,651 கோடி மட்டுமே செலவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

2019-20ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ.682.21 கோடி எனத் தெரிவித்துள்ளது. ஆனால், ரூ.998.15 கோடி செலவிட்டதாகத் தெரிவித்துள்ளது. அதாவது வருமானத்தை விட 46 சதவீதம் கூடுதலாகச் செலவிட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ.143.67 கோடியை வருமானமாகக் கணக்கில் காட்டியுள்ளது. அதில் ரூ.107.27 கோடி செலவிட்டுள்ளது.

தேர்தல் நிதிப் பத்திரங்களை விற்பனை செய்துவரும் எஸ்பிஐ வங்கி தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அளித்த பதிலில், “2019-20ஆம் ஆண்டில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் ரூ.3,429.56 கோடியை அரசியல் கட்சிகள் பெற்றுள்ளன. இதில் 87.29 சதவீதப் பணத்தை பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், என்சிபி ஆகிய 4 தேசியக் கட்சிகள் பெற்றுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், 2019-20ஆம் ஆண்டில் ரூ.3,441.32 கோடிக்கு தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாங்கியதாக மாநில மற்றும் தேசியக் கட்சிகள் தெரிவித்துள்ளன.

பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், என்சிபி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ், சிபிஐ ஆகிய 7 தேசியக் கட்சிகள் தங்களின் ஒட்டுமொத்த வருமானமாக ரூ.4,758.206 கோடி எனத் தெரிவித்துள்ளன.

இதில் அதிகபட்சமாக பாஜக சார்பில் நன்கொடையாக ரூ.3427.77 கோடி பெறப்பட்டுள்ளன. 2-வதாக, காங்கிரஸ் கட்சி ரூ.429.38 கோடியும், திரிணமூல் காங்கிரஸ் ரூ.108.54 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.93.01 கோடியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.3.02 கோடியும், மார்க்சிஸ்ட் கட்சி ரூ.93.01 கோடியும் பெற்றுள்ளன.

இதில் 4 தேசியக் கட்சிகள் அதாவது பாஜக, காங்கிரஸ், என்சிபி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆகியவை சேர்ந்து 2019-20ஆம் ஆண்டில் நன்கொடை மூலம் பெறப்பட்ட வருமானத்தில் 62.92 சதவீதத்தைப் பெற்றுள்ளன. அதாவது ரூ.2,993.82 கோடியைப் பெற்றுள்ளது.

தேர்தல் நிதிப் பத்திர நன்கொடை மூலம் பாஜக மட்டும் ரூ.2,555 கோடி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.317.86 கோடியும், திரிணமூல் காங்கிரஸ் ரூ.100.46 கோடியும், என்சிபி ரூ.20.50 கோடியும் பெற்றுள்ளது.

தேசியக் கட்சிகள் பெரும்பாலும், தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியைத் தேர்தல் செலவுகளுக்கும், தேர்தல் பிரச்சாரத்துக்கும், பொதுச் செலவுக்கும் செலவிட்டுள்ளன.

இதில் 2018-19ஆம் ஆண்டில் பாஜகவின் வருமானம் ரூ.2,410 கோடியாக இருந்தது. இது 2019-20ஆம் ஆண்டில் 50.34 சதவீதம் அதிகரித்து அதாவது, ரூ.1,213.20 கோடி அதிகரித்து ரூ.3,623.28 கோடியாக அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வருமானம் 2018-19ஆம் ஆண்டில் ரூ.918 கோடியாக இருந்த நிலையில் 2019-20ஆம் ஆண்டில் 25 சதவீதம் குறைந்து ரூ.682 கோடியாகக் குறைந்துள்ளது.

2018-19 மற்றும் 2019-20ஆம் ஆண்டுகளில் அதிகபட்ச சதவீதத்தில் வருமானம் என்சிபி கட்சிக்கு உயர்ந்துள்ளது. 2018-19ஆம் ஆண்டில் என்சிபி கட்சியின் வருமானம் ரூ.50.71 கோடியாக இருந்த நிலையில், 2019-20ஆம் ஆண்டில் 68 சதவீதம் அதிகரித்து (ரூ.34.87 கோடி) ரூ.85.58 கோடியாக அதிகரித்துள்ளது''.

இவ்வாறு ஏடிஆர் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x