

ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆலோசகர் மல்விந்தர் சிங் மாலி தனது பதவியிலிருந்து விலகினார்.
ஆனால், மாலி தனது ஃபேஸ்புக் பதிவில் ராஜினாமா என்ற வார்த்தையைக் குறிப்பிடவில்லை. நான் எந்தப் பொறுப்பையும் ஏற்காதபோது ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கடந்த 11-ம் தேதி இருவரைத் தனது ஆலோசகராக நியமித்தார். ஒருவர் முன்னாள் ஆசிரியர் மற்றும் அரசியல் ஆலோசகரான மல்விந்தர் சிங் மாலி, மற்றொருவர் பாபா பரித் பல்கலைக்கழகத்தின் சுகாதாரம் மற்றும் அறிவியல் பிரிவின் முன்னாள் பதிவாளர் பியாரே லால் கார்க்.
இந்நிலையில் கடந்த வாரம் மல்விந்தர் சிங் மாலி தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த கருத்தில், “இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே காஷ்மீரை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளன” எனத் தெரிவித்தார்.
மற்றொரு ஆலோசகர் கார்க், “இந்தியாவின் பகுதியாக காஷ்மீர் இருக்கிறது எனக் கருதினால் 370 பிரிவு 35ஏ ஆகியவற்றைத் திரும்ப வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார். மற்றொரு பதிவில், “ஆப்கனில் சீக்கியர்களையும், இந்துக்களையும் பாதுகாக்க வேண்டியது தலிபான்கள் கடமை. இதற்கு முன்பு போல் இல்லாமல், நாட்டைச் சிறப்பாக ஆண்டு, சூழலை மேம்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
சித்துவின் ஆலோசகர் மல்விந்தர் சிங் மாலியின் கருத்துக்குப் பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. முதல்வர் அமரிந்தர் சிங் விடுத்த கண்டனத்தில், “சித்துவின் ஆலோசகர்கர்கள் தெரிவித்த கருத்து ஆபத்தானது. நாட்டின் அமைதிக்கும், பஞ்சாப்பின் நிலைத்தன்மைக்கும் ஆபத்தானது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ், மற்றும் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு விரோதமானது. ஆதலால், உடனடியாக ஆலோசகர்களை சித்து திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஸ் ராவத் கூறுகையில், “ சித்துவின் ஆலோசகர்கள் இருவரும் பதவியிலிருந்து விலகுவது அவசியமானது” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்ததையடுத்து, ஆலோசகர் மல்விந்தர் சிங் மாலி தனது ஆலோசகர் பதவியிலிருந்து விலகுவதாக ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
மல்விந்த சிங் மாலி தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில், “நவ்ஜோத் சிங் சித்துவுக்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பிலிருந்து விலகுகிறேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எந்தப் பதவியையும் ஏற்கவில்லை, ஆதலால், விலகும் அவசியம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.