

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்திலுள்ள மியான்கன்ச் பஞ்சாயத்து மாயாகன்ச் என மாற்றப்பட உள்ளது. இது, முஸ்லிம் பெயர்களை மாற்றி வரும் பாஜகவின் அடுத்த முயற்சியாகக் கருதப்படுகிறது.
வட மாநிலங்களில் சுமார் 900 ஆண்டுகள் மொகலாய முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி புரிந்ததாக வரலாற்று பதிவுகள் உள்ளன. இதன் காரணமாக அதன் பல பகுதிகளில் முஸ்லிம் பெயர்கள் உள்ளன.
கடந்த 2017 இல் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்த பாஜக இந்த முஸ்லிம் பெயர்களை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. ராமர் கோயில் அமைந்துள்ள மாவட்டமான பைஸாபாத்தை அயோத்யா என மாற்றப்பட்டது.
அடுத்து அலகாபாத் மாவட்டம் பிரயாக்ராஜ் என்றானது. மொகல்சராய் என்பது தீன் தயாள் உபாத்யா நகர் எனவும் மாற்றப்பட்ட பட்டியல் நீளத் துவங்கி உள்ளது.
இந்த வரிசையில், கான்பூரின் அருகிலுள்ள உன்னாவ் மாவட்டத்தின் மியான்கன்ச் எனும் பஞ்சாயத்தையும் பாஜக அரசு விட்டு வைக்கவில்லை எனக் கருதப்படுகிறது. இதன் பெயர் மாயாகன்ச் என மாற்றப்பட உள்ளது.
இதற்கான கடிதம் அப்பகுதியின் பாஜக எம்எல்ஏவான பம்பா லால் திவாகர் என்பவரால் பஞ்சாயத்திற்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து அதன் தலைவரான நக்மா தலைமையில் ஆகஸ்ட் 16 இல் பஞ்சாயத்து கூட்டம் கூடியது.
இக்கூட்டத்தில் மியான்கச் எனும் பெயரை மாயாகன்ச் என மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை உபி அரசின் நடவடிக்கைக்கு உன்னாவ் மாவட்ட ஆட்சியர் ரவீந்தரா குமார் நேற்று அனுப்பியுள்ளார்.
கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் மியான்கச் வந்திருந்தார்.
அப்போது அவர் அப்பஞ்சாயத்தின் பெயரை மாயாகன்ச் என மாற்றுவதாகவும் உறுதி அளித்திருந்தார்.
இதையும் பாஜக எல்எல்ஏவான பாப்பா லால் தனது கடிதத்தில் நினைவு கூர்ந்திருந்தார். இந்தவகையில், உபி அரசிற்கு மேலும் பல பெயர் மாற்றத் தீர்மானங்கள் நடவடிக்கைக்காக ஏற்கனவே வந்துள்ளன.
இதில், அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் அமைந்த அலிகர் என்பது ஹரிகர் என மாற்றக் கோரப்பட்டுள்ளது. பெரோஸாபாத் என்பது சந்திரா நகர் என்றும், மெயின்புரியானது மாயன் நகர் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சஹரான்பூர் மாவட்டத்திலுள்ள தியோபந்த் பெயரையும் மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது. இத்தொகுதியின் பாஜக எம்எல்ஏவான பிர்ஜேஷ்சிங், தியோபந்தை தேவ்ரந்த் என மாற்ற வலியுறுத்தி வருகிறார்.
தியோபந்தில் தாரூல் உலூம் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பழம்பெரும் மதரஸாக்கள் அமைந்துள்ளன. எனவே, இப்பெயர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்புகள் நிலவுகின்றன.
உபியில் அடுத்த வருடம் துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தனது இந்துத்துவா கொள்கையை தீவிரப்படுத்தி பாஜக பிரச்சாரம் செய்வதால் இந்த முஸ்லிம்களின் பெயர் மாற்றங்கள் எனப் புகார் நிலவுகிறது.