பதான்கோட் தீவிரவாத தாக்குதல்: அடையாளம் தெரியாத நபர்கள் மீது பாகிஸ்தான் போலீஸ் வழக்கு பதிவு - இந்தியா குற்றம் சாட்டிய மசூத் பெயர் இல்லை

பதான்கோட் தீவிரவாத தாக்குதல்: அடையாளம் தெரியாத நபர்கள் மீது பாகிஸ்தான் போலீஸ் வழக்கு பதிவு - இந்தியா குற்றம் சாட்டிய மசூத் பெயர் இல்லை
Updated on
2 min read

பதான்கோட் விமானப் படை தளத் தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக, அடை யாளம் தெரியாத நபர்கள் மீது பாகிஸ்தான் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள் ளனர். ஆனால், இந்தியா குற்றம் சாட்டியுள்ள தீவிரவாதி மசூத் அசார் பெயர் அதில் இடம்பெறவில்லை.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப் படை தளத்தின் மீது கடந்த மாதம் 31-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டை 3 நாட்கள் தொடர்ந்து நீடித்தது. கடைசியில் 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும் இந்திய தரப்பில் 7 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியதில், பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்க தலைவர் மசூத் அசார், அவரது சகோதரர் ரவுப் மற்றும் 5 பேர் சதித் திட்டம் தீட்டி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆதாரங்களை திரட்டி பாகிஸ்தானிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கொடுத்தார். மசூத் உட்பட தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது.

அதன் அடிப்படையில் பதான் கோட்டில் தாக்குதலில் ஈடுபட்டவர் கள் மீது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலாவில் உள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவு (சிடிடி) அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர். எனினும், ‘அடையாளம் தெரியாத நபர்கள்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பதான்கோட் தாக்குதலின் போது தீவிரவாதிகள் தொடர்பு கொண்டு பேசிய தொலைபேசி எண்களும் எப்ஐஆர்-ல் குறிப்பிடப்பட்டுள்ளன

தீவிரவாதி மசூத் அசாருக்கு எதிரான ஆதாரங்களை இந்தியா அளித்திருந்தும், எப்ஐஆர்.ரில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து சிடிடி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக இந்தியா திரட்டியுள்ள ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமானால், முதலில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அப்போதுதான் போலீஸ் மற்றும் நீதித்துறை விசாரணையை தொடங்க முடியும்’’ என்றனர்.

ஆனால், இந்தியா குற்றம் சாட்டியுள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைவர் மசூத் அசார் பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து பஞ்சாப் மாகாண சட்டத் துறை அமைச்சர் ராணா சனாவுல்லா கூறுகையில், ‘‘இப்போதுள்ள நிலை யில் யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்ல இயலாது. முதலில் விசாரணை முடியட்டும். அதில் மசூத்துக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தால், அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை இந்தியாவிடம் கேட்டுள்ளோம். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள தால் புதிதாக விசாரணை குழு ஒன்று அமைக்கப்படும்’’ என்றார்.

முன்னதாக இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த 6 உறுப்பினர்கள் கொண்ட குழுவை பிரதமர் நவாஸ் ஷெரீப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் உயர் அதிகாரி (பாதுகாப்பு ஆலோசகர் தோவல்) அளித்த புகாரின் அடிப்படையில் பாகிஸ்தானில் எப்ஐஆர் பதிவு செய்வது இதுவே முதல்முறை என்றும் சனாவுல்லா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in