

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் ராமர் கோயில் விவகாரம் குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா நேற்று கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் எழுப்பும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை நாம் நிச்சயம் காத்திருக்க வேண்டும். அதன் பிறகு நிலவும் சூழ்நிலையை பொறுத்து, மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும். அதே சமயம் ராமர் கோயில் கட்டும் நிலைப்பாட்டில் இருந்து பாஜக ஒருபோதும் பின்வாங்காது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார். ஆனால் அயோத்திக்கு மட்டும் செல்வதில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு எந்த காரணமும் இல்லை. பிரதமருக்கு என்று சில தனிப்பட்ட விருப்பங்களும், முடிவுகளும் இருக்கும். அதை நாம் மறந்துவிடக்கூடாது. சரியான தருணம் அமையும் போது பிரதமர் அயோத்திக்கு செல்வார்.
நாடாளுமன்றத்தின் ஒப்புத லுடன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே, உறுப் பினர்களிடம் ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் சென்றிருந்த போது, நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததாக உத்தரப் பிரதேச அமைச்சர் அசம் கான் எழுப்பிய குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.
இத்தகைய மலிவான குற்றச் சாட்டுக்களால் சமாஜ்வாதி தலை வர்களின் செல்வாக்கும், அந்த அரசின் மீதான நன்மதிப்பும் தான் சீர்குலையும். இவ்வாறு அவர் கூறினார்.