Published : 26 Aug 2021 06:10 PM
Last Updated : 26 Aug 2021 06:10 PM

கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளியைக் குறைக்க மத்திய அரசு பரிசீலனை

கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தற்போது இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு இடையே 84 நாட்கள் இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் நோயெதிர்ப்பு ஊட்டலுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (National Technical Advisory Group on Immunisation - NTAGI) இடைவெளியைக் குறைக்கப் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி முதலில் 4 முதல் 6 வார இடைவெளியில் வழங்கப்பட்டது. பின்னர், அது 6 முதல் 8 வாரங்கள் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், மே மாதம் அமல்படுத்தப்பட்ட 12 முதல் 18 வார இடைவெளி தற்போது நடைமுறையிலுள்ளது.

இந்த மாற்றம் பல்வேறு தரப்பிலிருந்தும் பல கேள்விகளை எழுப்பியது. தடுப்பூசி பற்றாக்குறையால் தான் இந்த கால இடைவெளி என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், அரசுத் தரப்போ கூடுதல் இடைவெளிவிட்டு தடுப்பூசி வழங்குவது கூடுதல் ஆன்டிபாடிக்களை உருவாக்குவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் கோவிஷீல்டு இடைவெளியைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை 60,38,46,475 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 80,40,407 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். டிசம்பர் 2021க்குள் 100 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்குடன் அரசு தேசிய கரோனா தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x