கேரளாவில் அதிகரிக்கும் கரோனா: நாட்டின் மொத்த பாதிப்பில் 51 சதவீதம்: எச்சரிக்கும் மத்திய அரசு

கேரளாவில் அதிகரிக்கும் கரோனா: நாட்டின் மொத்த பாதிப்பில் 51 சதவீதம்: எச்சரிக்கும் மத்திய அரசு
Updated on
1 min read

நாட்டின் மொத்த கரோனா தொற்று பாதிப்பில் கேரளாவில் 51 சதவீதம் இருப்பதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் அண்மைகாலமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.

கேரளவில் நேற்று ஒரே நாளில் 31,445 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கே நேற்று ஒரே நாளில் 31,445 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 20 ஆம் தேதிக்குப் பின்னர் கேரளாவில் இவ்வளவு பெரிய அளவில் தொற்று உறுதியாகியுள்ளது இதுவே முதன்முறை.

மேலும், அங்கு ஒரே நாளில் கரோனாவால் 215 பேர் உயிரிழந்துள்ளனர். 20,271 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் பாஸிடிவிட்டி விகிதம் 19.03% ஆக உள்ளது. இதனால் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேரளாவுக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

இந்தநிலையில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் 46,000 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 58 சதவீதம் கேரளாவிலிருந்து பதிவாகியுள்ளன.

கேரளாவில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் 10,000 முதல் 1 லட்சம் பேர் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.


நாட்டின் மொத்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் கேரளா 51%, மகாராஷ்டிரா 16% மற்றும் மீதமுள்ள மூன்று மாநிலங்கள் நாட்டில் 4-5% பேர் என்றளவில் உள்ளது. மற்ற மாநிலங்கள் பாதிப்பு குறைந்து வருகிறது. கேரளாவில் கரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு அம்மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in