Published : 26 Aug 2021 05:22 PM
Last Updated : 26 Aug 2021 05:22 PM

கரோனாவில் நிராதரவான குழந்தைகளின் கல்விக்கு பிஎம் கேர்ஸ் நிதி விடுவிக்கப்படுமா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா பெருந்தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்கு உதவ பிஎம் கேர்ஸ் நிதியுதவி உடனடியாக விடுவிக்கப்படுமா என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் நிலையைப் பார்த்தும், குழந்தைகள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டும் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், அனிருத்தா போஸ் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் கவுரவ் அகர்வாலை நீதிமன்றம் நியமித்துள்ளது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி ஆஜரானார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், அனிருத்தா போஸ் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசுக்கு எழுப்பிய கேள்வியில், “குழந்தைகளுக்குக் கல்வி அடிப்படை உரிமை. ஆதலால், குழந்தைகள் பள்ளிக்கூடத்திலேயே தங்குவது அவசியம்.

அதிலும் தனியார் பள்ளியில் படித்த குழந்தைகள், கரோனாவில் பெற்றோரை இழந்த நிலையில் அவரின் எதிர்காலம் அச்சத்துக்குள்ளாகியுள்ளது. உயர்ந்த கல்விக் கட்டணம் ஆகியவற்றால் அவர்களால் கல்வியைத் தொடர முடியுமா என்ற அச்சம் இருக்கிறது.

கரோனா பெருந்தொற்றால் குழந்தைகள் அனுபவித்துவந்த நல்ல விஷயங்களை அவர்கள் இழந்துவிடக் கூடாது. ஆதலால், குழந்தைகளின் கல்விக்கு உதவ பிஎம் கேர்ஸ் நிதி குறைந்தபட்சம் இந்த ஆண்டுக்கு உடனடியாக விடுவிக்கப்படுமா” எனக் கேட்டது.

அதுமட்டுமல்லாமல், ''மாநில அரசுகளை ஒருங்கிணைத்து, குழந்தைகளின் கல்விக்காக நிதி பெற மத்திய அரசு உதவ வேண்டும். குழந்தைகளின் கல்விக்காக உடனடியாக நிதியை மத்திய அரசு விடுவிக்க இயலுமா? பிஎம் கேர்ஸ் நிதியுதவி பெற குழந்தைகள் தகுதியானவர்களா?'' என்று நீதிபதிகள் அமர்வு கேட்டது.

அதற்கு மத்திய சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி கூறுகையில், “கரோனாவில் ஆதரவற்ற நிலைக்குச் சென்ற குழந்தைகளை 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளோம். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள், பாதுகாவலர்களை இழந்த குழந்தைகள். இந்தக் குழந்தைகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் கவனத்தில் விடப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி நாகேஸ்வர ராவ், “கரோனாவில் ஆதரவற்ற நிலைக்குச் சென்ற குழந்தைகள் குறித்த விவரங்கள் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? அவ்வாறு இருந்தால், பிஎம் கேர்ஸ் நிதியைக் குழந்தைகளுக்கு வழங்க உதவியாக இருக்கும்.

குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தொண்டு நிறுவனங்களுடன் கூட்டமைத்து, ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவுகின்றன. கரோனாவில் ஆதரவற்ற குழந்தைகளை மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும். அவர்கள் தவறானவர்களின் கரங்களில் அவர்கள் எளிதில் சிக்கிவிடுவார்கள். குழந்தைகள் தங்களால் பாதுகாத்துக்கொள்ள முடியாதவர்கள். மாநில அரசுகள்தான் பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x