Published : 26 Aug 2021 04:45 PM
Last Updated : 26 Aug 2021 04:45 PM

ஆப்கனில் இருந்து அரசியல் தஞ்சம் கேட்டு வரும் அனைவருக்கும் அடைக்கலம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

ஆப்கனில் இருந்து அரசியல் தஞ்சம் கேட்டு வரும் அனைவருக்கும் மனிதநேய அடிப்படையில் இ‌ந்திய அரசு அடைக்கலம் அளிக்க வேண்டும் என, டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கன் விவகாரம் தொடர்பாக, இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை மற்றும் நிலைப்பாடு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று (ஆக. 26) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசினார். இக்கூட்டத்தில் திமுக சார்பாக அக்கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டு இவ்விஷயத்தில் திமுகவின் கருத்துகளை எடுத்துரைத்தார். அப்போது நாடாளுமன்ற மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா உடனிருந்தார்.

இக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு கூறியதாவது:

"இன்றைக்கு ஆப்கனில் நிலவும் அசாதாரண, நிலையற்ற சூழலுக்குக் காரணம் இருபது ஆண்டுகளாக அங்கிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறியதுதான். இதற்காகவே காத்திருந்த தலிபான்கள் எவ்வித எதிர்ப்பும் இன்றி நாட்டைக் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்கப் படை ஏன் ஆப்கனை விட்டு வெளியேறியது என்பதை நாம் அறிவோம்.

2019ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் பிரச்சாரத்தின்போதே அமெரிக்க மற்றும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) படைகள் ஆப்கானிய நாட்டிலிருந்து 31 ஆகஸ்ட் 2021-ல் திரும்பப் பெறப்படும் என்று அப்போதைய குடியரசுத் தலைவரான டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, 29.2.2020 அன்று கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரான பாம்பியோவுக்கும், தலிபான் அமைப்பின் தலைமை அரசியல் தொடர்பாளரான அப்துல் கனி பாராதாருக்கும் நடைபெற்ற விவாதத்தில் ஆப்கானில் இருந்து அந்நியப் படைகள் 2021 ஆகஸ்ட் 31-ல் காலி செய்யப்படும் என முடிவானது. ஆனால், தற்போது நேட்டோவும் அதன் கூட்டாளிகளும் இந்த காலக்கெடுவினை மாற்ற வேண்டுமென கூறுகின்றன. ஆனால், அமெரிக்கா ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியேறுவதில் உறுதியாக உள்ளது.

தலிபான்கள், தற்போது தாங்கள் மாறிவிட்டதாகவும் 2021-ல் இருந்ததுபோல் இல்லை எனவும் அறிவித்துள்ளனர். போரை நாங்கள் விரும்பவில்லை, ஆப்கனிஸ்தானத்தில் உள்ள மக்கள் யாவரும் எமது மக்கள்தான் எனவும் தலிபான் கூறியுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. என்றழைக்கப்படும் மத்திய புலனாய்வு முகமையின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் ஆகஸ்ட் 24 அன்று தலிபான் தலைமை அரசியல் பேச்சுவார்த்தையாளர் அப்துல் கனி பாராதாரைச் சந்தித்தார். மேலும், பாராதார் மற்றும் பிற தலிபான் தலைவர்கள் ஆப்கானிஸ்தானின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரான ஹமீது கர்சாயையும் அவரது நெருங்கிய தோழரும் வெளியுறவு அமைச்சருமான அப்துல்லாவையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

ஆக, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தலிபான்கள் சந்தித்துப் பேசியுள்ளது வரவேற்கத்தக்கதாகும். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் இன்னும் இளம்பருவத்தில் இருக்கிற காரணத்தால் இந்தியா இத்தகைய பேச்சுவார்த்தைகளை பலப்படுத்த வேண்டும்.

இந்திய அரசு ஆப்கனிய வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்துள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டிய தருணம் இது. அந்நாட்டின் நாடாளுமன்ற வளாகம், சால்மே அணை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு சொத்துகளை நாம் ரூ.300 கோடி செலவில் கட்டித் தந்துள்ளோம். மேலும், ஆப்கானிய மாணவர்களுக்கு உயர்கல்விக்கான நிதியுதவி வழங்கும் பொறுப்பையும் அவர்களின் திறன் மேம்பாட்டுக்கான பொறுப்பினையும் ஏற்றுள்ளோம்.

அதே நேரம், நமது அண்டை நாடுகள் நமது பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் விதத்தில் சீனாவுடன் நெருக்கம் காட்டுகின்றன. இலங்கையில் ஹம்பன்தோட்டாவில் நவீன துறைமுகத்தை சீனா அமைத்துள்ளது. சீனர்கள் பெருமளவில் இலங்கையில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். மியான்மர், நேபாளம், மாலத்தீவும் சீனாவுடன் நெருக்கமான உறவு பூண்டுள்ளன. பாகிஸ்தான் காலாகாலத்துக்கும் சீனாவுடன் உறவு பாராட்டி நம்முடன் பகையுணர்வு கொண்டுள்ளது. எனவே, இத்தகைய சூழ்நிலையில் உருவாகிவரும் ஆப்கானிய மாற்றங்களை இந்தியாவுக்குப் பாதகமாகவும் தனக்கு சாதகமாகவும் சீனா பயன்படுத்திக் கொள்வதைத் தடுத்து நிறுத்துவதை நாம் உறுதி செய்தாக வேண்டியது கட்டாயம்.

ஆப்கனுடன் இந்தியா எல்லைகளை பங்குகொள்ளவில்லை. ஆனால், பாகிஸ்தான், சீனா, துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானுடன் எல்லைகளைப் பகிர்ந்துள்ளன. சீனாவின் ஜின்ஜுவாங்க் பகுதிகளில் கணிசமான மக்கள்தொகையில் உள்ள உகுவார் இன முஸ்லிம் மக்களுக்கு மத உரிமைகளை சீன அரசு மறுக்கிறபடியால் இவர்கள் தலிபான்களின் துணையை நாடினால் அது சீனாவுக்கு எதிராக அமையும்.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் இந்திய அரசு ஆப்கனிய பிரச்சனையில் தகுந்த கொள்கை நிலைப்பாட்டையும் அணுகுமுறையையும் வடித்தெடுக்க வேண்டும் என்று திமுகவின் சார்பாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, இந்திய அரசு தலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். ஆப்கனிய பிரச்சினை தொடர்பான எதிர்காலப் பன்னாட்டுப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவும் இணைத்து கொள்ளப்பட வேண்டும். இதனிடையில், பேச்சுவார்த்தைகளில் சீனாவை இணைக்க வேண்டுமெனவும், இந்தியாவைத் தவிர்க்க வேண்டுமெனவும் கூறியுள்ள ரஷ்யாவின் ஒருதலையான கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்திய அரசு ரஷ்யாவின் இச்செயலை தீவிர எதிர்வினையுடன் கண்டிக்க வேண்டும்.

ஆப்கனில் உள்ள நீண்டகால நல்லுறவைக் கருத்தில் கொண்டு அங்கே வாழ்ந்துவரும் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்திட வேண்டும். அரசியல் தஞ்சம் கேட்டு வரும் அனைவருக்கும் மனிதநேய அடிப்படையில் இ‌ந்திய அரசு அடைக்கலம் அளிக்க வேண்டும்.

சார்க் எனப்படும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக் குழுவில் இந்தியாவின் முயற்சியால் ஆப்கானிஸ்தான் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது. எனவே, ஆப்கன் எதிர்காலம் தொடர்பான சமாதானப் பேச்சுக்கள் எல்லாவற்றிலும் பங்கேற்றிடும் பெரும் கடமையும் பொறுப்பும் இந்தியாவுக்கு உள்ளது".

இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x