

மத்திய வேளாண் அமைச்சகத்தின் திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம், கர்நாடகாவில் 2023 - 24ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மானாவாரி பகுதி ஆணையத்தின் (NRAA) தலைமைச் செயல் அதிகாரி அசோக் தல்வாயைக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று பெங்களூருவில் சந்தித்து, வேளாண் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்புக்குப் பின் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ள தேசிய மானாவாரி பகுதி ஆணையத்தின் அறிக்கை குறித்தும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவது குறித்தும் விரிவாக விவாதித்தோம். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் கர்நாடக அரசு மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது.
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வேளாண் திட்டங்களை கர்நாடகாவில் விரைவில் செயல்படுத்த இருக்கிறோம். அதன் மூலம் கர்நாடக விவசாயிகளின் வருமானம் 2023 - 24ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியதைப் போல இதிலும் கர்நாடகாவே முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக கர்நாடக வேளாண் துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் தலைமையில் குழு ஒன்றை அமைத்திருக்கிறோம். பல்துறை அனுபவம் வாய்ந்த விவசாயிகள், நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய இந்தக் குழு, தேசிய மானாவாரி ஆணையத்துடன் இணைந்து செயல்திட்டங்களை வகுக்கும். விரிவான திட்ட அறிக்கை தயாரான பிறகு அரசு அதைச் செயல்படுத்தும்.
உணவு மற்றும் பண்ணைப் பொருட்கள் பதப்படுத்துவது தொடர்பாக 'இரண்டாம் நிலை வேளாண் இயக்குநரகம்' அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விதை, பூச்சிக்கொல்லி மற்றும் உர மேலாண்மை ஆகியவை குறித்தும் கவனம் செலுத்தப்படும். உணவு மற்றும் விவசாயம், தோட்டக்கலை, பட்டு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, பால், மீன்வளம் உள்ளிட்ட அனைத்து பண்ணைப் பொருட்களையும் பதப்படுத்துவதற்காகவும் இந்தத் திட்டம் பயன்படும்''.
இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.