

கரோனா வைரஸால் குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அதனால் குழந்தைகளை தாராளமாக பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்றும் மத்திய அரசின் நோயெதிர்ப்பு ஊட்டலுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (National Technical Advisory Group on Immunisation - NTAGI) தலைமை மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.
என்.கே.அரோரா கூறியிருப்பதாவது:
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகள் கோவிட் 19 தொற்றால் தீவிர பாதிப்பை சந்திப்பதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்பது உறுதியாகியுள்ளது. ஆகையால் குழந்தைகளின் அறிவு மேம்பாட்டுக்காகப் பள்ளிகளைத் திறக்க வேண்டும்.
நாடு முழுவதும் 12 முதல் 17 வயதுடைய குழந்தைகள் 12 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு தீவிர கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் அவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் முன்னர் 18லிருந்து 45 வயதுடையவர்களுக்கு முதலில் வழங்க வேண்டும். குழந்தைகளை தாராளமாக பள்ளிகளுக்கு அனுப்பலாம். தடுப்பூசி செலுத்திய பின்னர்தான் அனுப்ப வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக அவர்களைச் சுற்றியுள்ள பெற்றோர், ஆசிரியர்கள் மற்ற பெரியவர்களை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூன்றாவது அலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படும் சூழலில் அரோராவின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. முன்னதாக, இந்தியாவில் வரும் அக்டோபரில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என எச்சரித்து, மத்திய உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் பிரதமர் அலுவலகத்தில் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், வெண்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதுவரை தடுப்பூசித் திட்டத்தில் குழந்தைகள் சேர்க்கப்படாததால், மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து பல்வேறு வகையில் ஆராய்ந்து வருவதாக நிபுணர் குழு கூறியுள்ளது. அதேவேளையில், குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு வார்டுகளை தயார்படுத்துமாறும் அறிவுறுத்தியது. இந்நிலையில் மருத்துவர் அரோராவின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும் ஜைகோவ் டி
ஜைகோவ் டி என்ற உலகின் முதல் டிஎன்ஏ கரோனா தடுப்பூசியை ஜைடஸ் கேடில்லா நிறுவனம் தயாரித்துள்ளது. இது வரும் அக்டோபரில் 12 வயது முதல் 17 வயதுவரையிலான குழந்தைகளின் பயன்பாட்டுக்காக அறிமுகமாகிறது. இது 66.6% துல்லிய பாதுகாப்பு தருவதாக பரிசோதனை முடிவுகளில் உறுதியாகியுள்ளது.