

ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து இந்தியர்களையும் மீட்க வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உறுதியாக இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்தார்.
தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்ததைஅடுத்து, அங்கிருந்து தங்கள்குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் மீட்புநடவடிக்கை கடந்த 16-ம் தேதிதொடங்கியது. ராணுவ விமானங்கள் மூலம் நடைபெறும் இந்தமீட்பு நடவடிக்கையில், இந்திய குடிமக்கள் மட்டுமின்றி ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோரும் மீட்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பாதுகாப்பு துறை இணையமைச்சர் அஜய் பட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து இந்தியர்களையும் மீட்டு பாதுகாப்பாக தாய்நாடு அழைத்து வர வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உறுதியாக இருக்கிறார். அந்நாட்டில் இருந்து கடைசி இந்தியக் குடிமகனை மீட்கும் வரை இந்தியாவின் மீட்பு நடவடிக்கை தொடரும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது அதனை எதிர்த்தவர்கள், தற்போது அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பார்கள். இதுபோன்ற சட்டத்தை இயற்றாத பல நாடுகளின் குடிமக்கள், தற்போது ஆப்கானிஸ்தானில் தங்கள் வாழ்க்கையை இழந்து வருகிறார்கள். இவ்வாறு அஜய் பட் கூறினார்.
இ-விசா கட்டாயம்
ஆப்கானிஸ்தான் குடிமக்கள் இந்தியா வருவதற்கான விசா நடைமுறைகளை விரைவாக முடிக்கும் வகையில் புதிய வகை இ-விசாவை (e-Emergency X-Misc Visa) மத்திய அரசு இம்மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்தது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியா வருவதற்கு இந்தப் புதிய இ-விசா கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் இல்லாத ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள விசாக்கள் இனி செல்லாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா வரவிரும்பும் ஆப்கன் குடிமக்கள் www.indianvisaonline.gov.in என்ற இணையதள முகவரியில் புதிய இ-விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.- பிடிஐ