

வளர்ச்சி அடைய வாய்ப்புள்ள தொழில் துறைக்கு தேவையான கடனை வழங்குமாறு பொதுத் துறை வங்கி தலைவர்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது வங்கிகளின் நிதிநிலை, செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் நிதிஅமைச்சர் வங்கி தலைவர்களிடம் கூறியதாவது:
கரோனா காலகட்டத்திலும் ஜிஎஸ்டி அதிகாரிகள் தொடர்ந்துசிறப்பாக செயலாற்றி மாதம் ரூ.1லட்சம் கோடி அளவுக்கு வரிவசூல் செய்வது பாராட்டுக்குரியது. வங்கிகளின் வழக்கமான செயல்பாடுகளில் மாற்றம் மிகவும் அவசியம். தொழில் துறைக்குத் தேவையான நிதியைவங்கிகள் வழங்க வேண்டும். குறிப்பாக ஏற்றுமதி தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான கடனுதவிகளை வழங்குவதில் முன்னுரிமை தர வேண்டும். ஏற்றுமதிமேம்பாட்டு அமைப்புகளுடன் வங்கி அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி அவர்களது தேவைகளை உணர்ந்து அதனடிப்படையில் உரிய நேரத்தில் உதவ வேண்டும்.
மாறிவரும் சூழலில் தொழில் துறையினர் வெளியிலிருந்து கடன் திரட்டுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இதை உணர்ந்து வங்கிகளும் பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலம்கடனுதவி அளிப்பதில் முன்னுரிமை தர வேண்டும். குறிப்பாக வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளுக்கு கடன் அளிப்பதில் முக்கியத்துவம் தர வேண்டும்.
பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடு தற்போது சிறப்பாக உள்ளது. அனைத்து வங்கிகளும் லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளன. சில வங்கிகள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. வங்கிகளின் வளர்ச்சிக்குத் தேவையானமூலதன நிதி ஆதாரங்களை அவை வேறு வழிகளின் மூலமும்திரட்டிக்கொள்ளலாம். கரோனாகாலத்திலும் எவ்வித இடையூறும்இன்றி வங்கி செயல்பாடு உள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. வடகிழக்கு மாநிலங்களில் இயற்கை வேளாண் சாகுபடி மூலமான பழ உற்பத்தி சிறப்பாக உள்ளது. இங்குள்ள வேளாண் துறைகளுக்கு தேவையான வசதிகளை உருவாக்க வங்கிகள்கவனம் செலுத்தலாம். இவ்வாறுஅமைச்சர் கூறினார்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தில் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல வங்கிஓய்வூதியதாரர்களின் பங்களிப்பும்30% அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் என்று நிதி சேவைத்துறை செயலர் தேபஷிஷ் பாண்டா தெரிவித்தார்.- பிடிஐ