Published : 26 Aug 2021 03:13 AM
Last Updated : 26 Aug 2021 03:13 AM

பஞ்சாப் முதல்வர் அமரீந்தரை பதவி நீக்க வேண்டும்: 4 அமைச்சர்கள், 26 எம்எல்ஏக்கள் போர்க்கொடி

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங்கை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என அவரது 4 அமைச்சர்கள் மற்றும் 26 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு உள்ளது. இதில் கடந்த மாதம் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, கட்சியின் மாநிலத் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்.

எனினும், முதல்வர் அமரீந்தரை தனிப்பட்ட முறையில் விமர்சித்த சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒருதரப்பினர் பிடிவாதமாக இருந்தனர். அதன்பின், மாநில தலைவராக சித்து பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் அமரீந்தர் பங்கேற்றார்.

இந்நிலையில் முதல்வர் அமரீந்தருக்கு எதிராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரிப்த் ராஜிந்தர் சிங் பாஜ்வா, சிறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ராந்தவா, தொழிற்கல்வி அமைச்சர் சரண்ஜித் சிங் சான்னி, வருவாய்த் துறை அமைச்சர் சுக்பிந்தர் சிங் சர்க்காரியா மற்றும் 26 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்கள் அமைச்சர் ராஜிந்தர் சிங் பாஜ்வா வீட்டில் நேற்று முன்தினம் கூடி ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிருப்தியாளர்கள் “சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலுடன் அமரீந்தர் கைகோத்து செயல்படுகிறார். தேர்தல் வாக்குறுதிகளை அமரீந்தர் இனிமேலும் நிறைவேற்றுவார் என எங்களுக்கு நம்பிக்கையில்லை. அவரை பதவி நீக்கம் செய்ய கட்சி மேலிடத்தில் முறையிட உள் ளோம். மேலிடம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்” என்று தெரிவித்தனர்.

அமரீந்தருக்கு எதிராக பேசுபவர்களில் பெரும்பாலானோர் சித்துவின் ஆதரவாளர்கள். அமரீந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இவர்கள் வெளிப்படையாக அறிவித்தாலும், அடுத்த முதல்வராக யார் நியமிக்கப்பட வேண்டும் என்பதை தெரிவிக்கவில்லை. இதனை கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் 6 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x