

குற்றப்பின்னணி உள்ள எம்.பி.க்கள் மீதான வழக்குகளை ஒரு ஆண்டுக்குள் முடித்துத் தீர்ப்பளிக்குமாறு நீதித்துறையைக் கேட்டுக் கொள்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
“மக்களவையில் உள்ளவர்கள் சிலர் குற்றப்பின்னணி உடையவர்கள் என்று பொதுமக்கள் பார்வை உள்ளது. இந்தக் கறையைப் போக்கியாகவேண்டும். எந்த உறுப்பினர் மீதும் இருக்கும் நிலுவை வழக்குகளை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரித்து ஒரு ஆண்டுக்குள் நீதி வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாங்கள் கேட்டுக் கொள்வோம்.
குற்றம் செய்தவர்கள் சிறைக்குச் செல்வார்கள், செய்யாதவர்கள் மதிப்புடன் தலைநிமிர்ந்து நடக்கலாம்.
சட்டம் தன் கடமையைச் செய்யும் குற்றம் செய்தவர்கள் தப்ப முடியாது. அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படவேண்டும்” என்றார்.
ஊழல் பிரச்சினை குறித்து அவர் பேசுகையில், ஆட்சி அதிகாரத்தில் மோசமான நிர்வாகம் என்ற ஒன்று நுழைவது உடலில் சர்க்கரை நோய் நுழைவது போல. அது ஒட்டுமொத்த அமைப்பையும் பாழ் படுத்தி விடும் என்றார்.
ஊழல் இந்தியா என்ற பெயரை அழிக்கும் விதமாக செயல்படவேண்டும் என்று அவர் கூறினார்