

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத் வியாழக்கிழமையன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவதற்கு காரணமாக இருக்கும் ‘தண்டனை குறைப்பை’ எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரதீப் பாலேகர் என்ற சமூக செயற்பாட்டாளர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், “சஞ்சய் தத்துக்கு தண்டனை காலத்தை குறைக்கும் மகாராஷ்டிர அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 5 ஆண்டு முழுவதும் அவர் தண்டனை அனுபவிக்கும் வகையில் அவர் சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட வேண்டும்” என்று கோரியுள்ளார்.
நன்னடத்தை காரணமாக சஞ்சய் தத்துக்கு தண்டனை குறைப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மனுதாரரின் வழக்கறிஞர் நிதின் சத்புதே கூறும்போது, “இந்த தண்டனை குறைப்பு தவறானது மற்றும் சட்ட விரோதமானது. தண்டனை குறைப்புக்கு நன்னடத்தை என்று எதைச் சொல்கிறார்கள். சிறிய குற்றங்களுக்காக சிறையில் உள்ள பலர் தண்டனை குறைப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனை நீதிமன்றத்தில் நான் எடுத்துரைப்பேன்” என்றார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புனே நகரில் உள்ள எரவாடா மத்திய சிறையில் இருந்து வரும் சஞ்சய் தத் வியாழக்கிழமைவிடுதலை செய்யப்படுவார் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்னடத்தை அடிப்படையில் சஞ்சய் தத், முழு தண்டனை காலத்துக்கு 103 நாட்களுக்கு முன் விடுதலை செய்யப்பட உள்ளார்.