

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பழிவாங்கும் விதமாகவே, சோனியா குடும்பம் நாடாளுமன்றத் துக்கு இடையூறு விளைவித்து, ஏழைகளுக்குப் பயனளிக்கும் மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.
அசாமில் இந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற வுள்ளது. இங்கு நேற்று நடந்த நிகழ்ச்சியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஒரு குடும்பம் எதிர்மறை அரசிய லில் ஈடுபடுகிறது. 400 எம்.பி.க் களிலிருந்து 40 எம்.பி.க்களாக குறைந்துவிட்ட தேர்தல் தோல்விக் காக, மோடியின் பணியைச் செய்ய விடக்கூடாது என அக்குடும்பம் நினைக்கிறது. தடைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறது. அதற் கான சதி தொடர்ந்து நடக்கிறது.
காங்கிரஸ் அரசை வீழ்த்துவதற் காக வாக்களித்த ஏழை மக்களை பழிவாங்க அவர்கள் முடிவு செய் துள்ளனர். மோடி, பாஜக, மத்திய அரசை எதிர்த்தாலும் சில எதிர்க் கட்சித் தலைவர்கள் நாடாளு மன்றம் செயல்பட வேண்டும், அலுவல்கள் நடைபெற வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், ஒரு குடும்பம் மாநிலங்களவையை செயல்பட அனுமதிக்கவில்லை. இந்நாட்டு மக்கள் அக்குடும் பத்தைத் தோல்வியடையச் செய்த தால், வளர்ச்சியைத் தடுக்கின்றனர்.
இந்த அரசியலால் நாட்டுக்கு நன்மை கிடைக்கப்போவதில்லை. ஒரு குடும்பத்தின் இந்த அழிவு மனப்பான்மை அரசியலை மற்ற எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. அசாமில் பாஜகவுக்கு ஒரு வாய்ப் புக் கொடுங்கள். மத்திய அரசுக்கு செவிசாய்க்கும் மாநில அரசு இருந்தால்தான் அங்கு நலத்திட்டங் கள் நிறைவேறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அசாமில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் வாக்கு வங்கியாக உள்ளனர். அவர்களைக் குறிவைத்து மோடி பேசினார். சோனியா குடும்பப் பெயரை அவர் நேரடியாகக் குறிப்பிடாமல் தாக்கிப் பேசினார்.
2 திட்டங்கள் அர்ப்பணிப்பு
பிரம்மபுத்ரா கிராக்கர் பாலிமர் மற்றும் நுமாலிகர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மெழுகு தொழிற் சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக் கும் நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது:
வடகிழக்கு மாநிலங்களுக்கு புதிய மேம்பாட்டுத் திட்ட மாதிரி தேவை. அப்போதுதான், மியான் மர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியாவுடன் இணைந்து இப்பிராந்தியத்தின் ஒருங் கிணைந்த வலுவை எட்ட முடியும்.
சமநிலை வாய்ந்த, அனைத் துத் துறை சார்ந்த வளர்ச்சி இருக்க வேண்டும். ஆனால், நாட்டின் கிழக்கு, மற்றும் வடகிழக்கு பிர தேசங்கள் பின்தங்கியிருக்கின்றன. இதனால், நாட்டின் வளர்ச்சி முழு மையடையவில்லை. தற்போது தொடங்கப்பட்டுள்ள இரு திட்டங் களும், 25 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டிருந்தால், புதிய தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகள் வந்து, அனைத்து துறை சார்ந்த வளர்ச்சி இம்மாநிலத் தில் ஏற்பட்டிருக்கும்.
2-ம் தலைமுறையினர் இத் திட்டங்களால் பெரும் பயனடைந் திருப்பர். ஒட்டுமொத்த தலைமுறை யும் பயன் பெற வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
தகவல் தொடர்பில் பின் தங்கியிருப்பது, இப்பகுதியின் வளர்ச்சியை பெருமளவு பாதித் துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ராகுல் காந்தி பதிலடி:
புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சி மாநில தலைமைகள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாக்குபோக்குகளையே பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். அவரால் எதையும் செய்ய முடியவில்லை.
பெரிய தொழிலதிபர்கள் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செயல்படவில்லை என்று எங்கள் முன் கதறுகின்றனர். எனவே மோடி சாக்குபோக்குகளை விடுத்து ஆட்சி புரியட்டும்” என்றார்.