ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் சாத்தியமா?- பாஜக எம்.பி. சந்தேக கேள்வி

ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் சாத்தியமா?- பாஜக எம்.பி. சந்தேக கேள்வி
Updated on
1 min read

‘‘உலகிலேயே மிக குறைந்த விலையில் ரூ. 251-க்கு எப்படி ஸ்மார்ட் போனை விற்க முடியும்?’’ என்று பாஜக எம்.பி. கிரித் சோமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' தொழில் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், இந்திய தயாரிப்பு நிறுவனமான ரிங்கிங் பெல்ஸ், ‘பிரீடம் 251’ என்ற பெயரில் ரூ. 251-க்கு ஸ்மார்ட் போன் விற்பனையைத் தொடங்கியுள்ளது. ஆனால், இந்த நிறுவனத்தின் மீது பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பாஜக எம்.பி. கிரித் சோமையா வெள்ளிக்கிழமையன்று கூறும்போது “மிகக் குறைந்த விலையில் ரூ.251-க்கு எப்படி ஸ்மார்ட் போனை விற்க முடியும்? அந்த நிறுவனம் ஒரு மோசடி நிறுவனமாக தெரிகிறது. இது மிகப்பெரிய மோசடி. அதனால்தான் அந்த நிறுவனத்தைப் பற்றிய எல்லா ஆவணங்களையும் படித்தேன். அந்நிறுவனத்தின் உரிமையாளரின் நம்பகத்தன்மை குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது” என்றார்.

மேலும், ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மீதான தனது சந்தேகங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு அமைச்சகம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), நுகர்வோர் அமைச்சகம், செபி, நிறுவனங்கள் துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மாநில அரசுகளுக்கு எம்.பி. கிரித் சோமையா கடிதம் அனுப்பியுள்ளார்.

முன்னதாக தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, கிரித் எழுதிய கடிதத்தில் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் பற்றி பல கேள்விகளை எழுப்பி இருந்தார். அதில், நிறுவனத்தின் பின்னணி, நிதி நிலைமை, உரிமையாளர்களின் நம்பகத்தன்மை உட்பட பல சந்தேகங்களை எழுப்பினார்.

இதற்கிடையில், ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சதா கூறும்போது, “உள்ளூரில் உதிரி பாகங்களை ஒன்றிணைத்து (அசெம்பிளிங்) பிரீடம் 251 ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் ஆன்லைன் மார்க்கெட்டிங் செய்வதால் குறைந்த விலைக்கு விற்க முடியும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in