

புதிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்காக, அரசு இல்லத்தை காலி செய்யுமாறு 55 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 265 முன்னாள் எம்.பி.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்களவை செயலாளர் பி.ஸ்ரீதரன் கூறுகை யில், "தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்தை வரும் 18-ம் தேதிக்குள் காலி செய்யுமாறு அனைத்து முன்னாள் எம்.பி.க்களுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது.
அதேநேரம், முன்னாள் அமைச்சர்களைப் பொறுத்தவரை வரும் 26-ம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என அரசு இல்ல இயக்குநரகம் (டிஓஇ) கேட்டுக்கொண்டுள்ளது. இது, புதிய அரசு பொறுப்பேற்கும்போது மேற்கொள்ளப்படும் வழக்கமான ஒரு நடைமுறைதான்" என்றார்.
16-வது மக்களவைக்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் உள்ளிட்ட 320 புதிய எம்.பி.க்களுக்கு தலைநகர் டெல்லியில் அரசு இல்லம் ஒதுக்க வேண்டி உள்ளது.
மத்திய அமைச்சர்களுக்கு பங்களாக்களை ஒதுக்கீடு செய்யும் பொறுப்பு டிஓஇ வசமும் எம்.பி.க்களுக்கு இல்லம் ஒதுக்கீடு செய்யும் பொறுப்பு மக்களவை வீட்டுவசதிக் குழுவிடமும் உள்ளது.
வரும் 11-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் மக்கள வைத் தலைவரால் மக்களவை வீட்டுவசதிக் குழு அமைக்கப்படும்.
இதுகுறித்து மத்திய பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"முன்னாள் உறுப்பினர்கள் அரசு இல்லங்களை காலி செய்த பிறகு, வெள்ளை அடித்தல் மற்றும் தேவைப்பட்டால் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட பிறகே புதிய உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்ய முடியும்" என்றார்.