

கேரளவில் ஒரே நாளில் 31,445 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கே இன்று ஒரே நாளில் 31,445 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 20 ஆம் தேதிக்குப் பின்னர் கேரளாவில் இவ்வளவு பெரிய அளவில் தொற்று உறுதியாகியுள்ளது இதுவே முதன்முறை.
மேலும், அங்கு ஒரே நாளில் கரோனாவால் 215 பேர் உயிரிழந்துள்ளனர். 20,271 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் பாஸிடிவிட்டி விகிதம் 19.03% ஆக உள்ளது. பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதைக் குறிப்பிடும் அளவீடு.
தேசிய அளவிலும் அதிகரிக்கும் தொற்று:
நாடு முழுவதும் அன்றாட கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,593 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று மேலும் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கூடுதலாக 12 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்றைய ஒரு நாள் பாதிப்பு 37,593 அதிகரித்துள்ளது.
60 கோடியைக் கடந்த தடுப்பூசி:
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, நாட்டில் 60 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். அதேபோல் நாட்டில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 5 ஆம் தேதிக்கு முன்னதாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ட்விட்டர் மூலம் அவர் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.