Published : 25 Aug 2021 03:15 AM
Last Updated : 25 Aug 2021 03:15 AM

ஆப்கானிஸ்தானில் இருந்து 25 இந்தியர் உட்பட 78 பேர் மீட்பு

புதுடெல்லி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். அவர்களுக்குப் பயந்து லட்சக் கணக்கான மக்கள், ஆப்கனை விட்டு வெளியேற துடிக்கின்றனர். காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். அவர் களை வெளியேற கூடாது என்று தலிபான்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில், ஆப்கனில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக உள்ளன. அதன்படி, ஆப்கனில் உள்ள இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அடுத்தகட்டமாக காபூலில் சிக்கியிருந்த 25 இந்தியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள் என 78 பேரை மீட்டு, இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானத்தில் கடந்த திங்கட்கிழமை தஜிகிஸ்தானின் துஷான்பே நகரத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்குள்ள விமான நிலையத்தில் அனைவரும் காத்திருந்தனர்.

இந்நிலையில் அந்த 78 பேரும் துஷான்பே விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் நேற்று டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுடன் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப்பின் 3 பிரதிகளும் எடுத்து வரப்பட்டன. அவர்களை மத்திய அமைச்சர்கள் ஹர்திப் சிங் புரி மற்றும் வி.முரளிதரன் ஆகியோர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x