

வருமான வரி படிவங்களை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வதற்கான இணையதள செயல்பாட்டில் நிலவி வந்த பிரச்சினைகள் குறித்து மத்திய நிதி அமைச்சர்நிர்மலா சீதாராமனிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் இன்போசிஸ் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக்.
இணையதளம் மூலம் வருமானவரி படிவங்களை தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் கடந்த ஜூன் 7-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்தே இந்தஇணையதளத்திற்குள் சென்றுதாக்கல் செய்வதில் பிரச்சினைகள் நிலவுவதாக புகார்கள் எழுந்தன. விரைவிலேயே இப்பிரச்சினைகள் சரி செய்யப்படும் என நிதி அமைச்சரும் கூறி வந்தார். ஆனால் இரண்டரை மாதங்களாகியும் பிரச்சினை சரி செய்யப்பட வில்லை.
இதைத் தொடர்ந்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இன்போசிஸ் தலைமைச் செயல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் 21 வரை இணையதள செயல்பாடு சரி செய்யப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்படி இன்போசிஸ் தலைமைச் செயல் அதிகாரி சலீல்பரேக் தலைமையிலான குழு நிதிஅமைச்சரை நேற்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்தது. அப்போது தொழில்நுட்ப சிக்கல் இருந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இப்பிரச்சினை சரி செய்யப்பட்டுவிடும் என்றும் ஆக. 21,21ஆகிய தேதிகளில் நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப் பட்டதால் இணையதளம் முழுவதும் செயல்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
இணையதள செயல்பாடு சரிவர இல்லாதது வரி செலுத்துவோருக்கு மட்டுமல்ல அரசுக்கும் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக நிதி அமைச்சர் இன்போசிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தார். எவ்வித சிக்கலுமின்றி இணையதளம் செயல்பட கூடுதல் பணியாளர்களை இதற்கு நிய மிக்குமாறு நிதி அமைச்சகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அப்போது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பிரவீண் ராவ் தலைமையிலான 750 பேரடங்கிய பணியாளர்கள் செயல்படுவதாக சலீல் பரேக் குறிப்பிட்டார்.
செப். 15-க்குள் இணையதளத்தில் எவ்வித பிரச்சினையும் நிகழாதவகையில் தீர்க்கப்பட வேண்டும்என்று நிதி அமைச்சர் வலியுறுத்தினார். இந்தப் பிரச்சினையை விரைவாக தீர்த்து வைப்பதாக சலீல் பரேக் உறுதி அளித்தார். தடங்கல் இல்லாத வகையில் இணையதளம் செயல்படுவதை தங்கள் நிறுவனம் விரைவில் உறுதிசெய்யும் என்றும் நிதி அமைச்சரிடம் இன்போசிஸ் குழுவினர் தெரிவித்தனர். இந்த சந்திப்புக்கு சில மணி நேரங்கள் முன்னதாகவே இணையதளம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.- பிடிஐ