

ஆப்கனிலிருந்து அமெரிக்காவால் மீட்கப்பட்ட 146 இந்தியர்கள் தோஹா நகரிலிருந்து விமானம் மூலம் நேற்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாத அமைப்பினர் கடந்த 15-ம் தேதி தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து, ஏராளமான வெளி நாட்டினர் தாயகம் திரும்ப காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.
காபூல் விமான நிலையத்தை மட்டும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம், வெளிநாட்டினர் விமானம் மூலம் தாயகம் திரும்ப உதவி வருகிறது.
அந்த வகையில், கடந்த 16, 17-ம் தேதிகளில் இந்திய தூதரக ஊழியர்கள் 200 பேர் இந்திய விமானப் படை விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கு தங்கியுள்ள மற்ற இந்தியர்களையும் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. நேற்று முன்தினம் 2 ஆப்கன் எம்.பி.க்கள் உட்பட 392 பேர் 3 விமானங்கள் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் 135 பேர் தோஹாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டவர்களும் அடங்குவர்.
இந்நிலையில், தோஹாவில் இருந்து 2-ம் கட்டமாக 146 இந்தியர்கள் 4 வெவ்வேறு விமா னங்களில் நேற்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். ஆப் கனில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்த இவர்கள் நேட்டோ மற்றும்அமெரிக்க விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு கத்தார் தலைநகர் தோஹாவில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
26-ல் அனைத்து கட்சி கூட்டம்
ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிக்க வரும் 26-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத் துள்ளது. - பிடிஐ
பாப் பாடகி ஆர்யனா வெளியேறினார்
ஆப்கானிஸ்தானின் புகழ்பெற்ற பாப் பாடகி ஆர்யனா சயீத் (36) தனது 13 லட்சம் ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில், “மறக்க முடியாத சில இரவுகளை சந்தித்த நான், இப்போது நலமாக உயிருடன் உள்ளேன். அமெரிக்க சரக்கு விமானம் மூலம் தோஹா நகருக்கு வந்துவிட்டேன். விரைவில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள எனது வீட்டுக்கு சென்று விடுவேன்” என கூறியிருந்தார்.
பின்னர் வீட்டுக்கு சென்ற பிறகு, “நான் எனது வீட்டுக்கு வந்த பிறகுதான் என்னுடைய மனமும் உணர்வும் இயல்புநிலைக்கு திரும்பியது. உங்களிடம் நிறைய விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
ஆப்கன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாட்டு பாடுதல் போட்டியின் நடுவராக ஆர்யனா இருந்து வந்தார். இவரது கணவர் ஹாசிப் சையது ஆப்கன் இசையமைப்பாளர் ஆவார். எனினும் இவர்கள் இஸ்தான்புல் நகரில் நிரந்தரமாக வசித்து வருகின்றனர்.