உதவிக்கரம் நீட்டியதற்காக உதை வாங்கினேன்: தான்சானியா இளைஞரின் வேதனை சாட்சியம்

உதவிக்கரம் நீட்டியதற்காக உதை வாங்கினேன்: தான்சானியா இளைஞரின் வேதனை சாட்சியம்
Updated on
2 min read

பெங்களூருவில் ஆப்பிரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவியை பொது மக்கள் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் குறித்து மற்றொரு ஆப்பிரிக்க மாணவர் பீட்டர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். பீட்டர், சோழதேவனஹள்ளியில் உள்ள ஆச்சார்யா கல்வி மையத்தில் பயின்று வருகிறார். அதே கல்வி நிலையத்தில்தான் பாதிக்கப்பட்ட மாணவியும் படிக்கிறார்.

'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "தான்சானியா மாணவி மீதான தாக்குதல் சம்ப்வம் எனக்கு கிடைக்கும்போது நான் என் உறவினர் வீட்டில் இருந்தேன். தகலறிந்ததும் உடனே அங்கு சென்றேன். அங்கு கூடியிருந்தவர்கள் கண்மூடித்தனமான கோபத்தில் இருந்தனர். அந்த இளம் பெண்ணை 20 நிமிடங்களுக்கு மேலாக துரத்திச் சென்றனர். அவரது ஆடைகளை கிட்டத்தட்ட முழுமையாகவே கிழித்துவிட்டனர்.

அந்த இடத்திலிருந்து அவரை அப்புறப்படுத்த முயன்றேன். அப்போது நானும் தாக்குதலுக்குள்ளேன். நாங்கள் இருவருமே அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றோம். ஆனால், எங்களை அவர்கள் தப்பிக்க விடவேயில்லை. மண்டை உடைந்த நிலையில் அழுது கொண்டே, வீடுகளின் கதவுகளை தட்டினோம். எனது சட்டையைக் கழற்றி அப்பெண்ணுக்கு கொடுக்க முயன்றேன். கும்பலில் இருந்தவர்கள் அதை அப்பெண்ணுக்கு தர அனுமதிக்கவில்லை. உள்ளூர்வாசி ஒருவரும் தனது டி ஷர்ட்டை கொடுத்து உதவ முயன்றார். அவரையும் அந்தக்கும்பல் தாக்கியது. பின்னர் எங்களைப் பார்த்து பரிதாபமடைந்த உள்ளூர்வாசிகள் 4 பேர் எங்களை சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்து எங்களை காப்பிறனர். அவர்கள்தான் எங்களை மருத்துவமனையிலும் சேர்த்தனர்" என்றார்.

சம்பவம் என்ன?

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்துள்ள சோழதேவனஹள்ளியை சேர்ந்தவர் சஃபானா தாஜ் (35). இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு தனது கணவருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது ஆப்பிரிக்க நாடான சூடானைச் சேர்ந்த முகமது அஹாத் இஸ்மாயில் (21) என்ற கல்லூரி மாணவர் ஓட்டிவந்த கார் சஃபானா மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முகமது அஹாத் இஸ்மாயில் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அங்கிருந்து தப்பியோடிய அவரை, இளைஞர்கள் விரட்டி விரட்டி அடித்தனர். அப்போது அங்கு வந்த வேனின் பின்பக்கமாக ஏறி அவர் தப்பினார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் ஆப்பிரிக்க மாணவரின் காரை அடித்து நொறுக்கி, பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தினர். அந்த வழியாக சென்ற அனைத்து ஆப்பிரிக்க மாணவர்கள் மீதும் உள்ளூர் கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவம் நடந்து அரை மணி நேரம் கழித்து, தான்சானியா நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி அந்த வழியாக சென்றுள்ளார். அங்கிருந்த கும்பல் அவரையும் தாக்கி, ஆடைகளை கிழித்து நிர் வாணமாக்கியது.

தூதரக உதவி:

சோழதேவனஹல்லியில் உள்ள தான்சானியா மாணவர்கள் பலரும் உதவி கோரி தங்கள் நாட்டு துணைத் தூதரகத்தை அணுகியிருக்கிறார்கள்.

போலீஸ் உறுதி:

நடந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மை என்னவென்பதை நான் கண்டறிவேன். போலீஸ் தரப்பில் ஏதாவது மெத்தனம் இருப்பது உறுதியானால் நிச்சயம் நடவடிக்கை பாயும் என கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி ஓம் பிரகாஷ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in