

லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என குற்றம்சாட்டப்பட்ட அபு ஜுண்டால் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பை யில் பல இடங்களில் லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 166 பேர் கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் தீவிரவாதி டேவிட் ஹெட்லி அமெரிக்க காவல் துறையால் கைது செய்யப்பட்டு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
ஹெட்லி அமெரிக்க சிறையில் இருந்தபடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பை சிறப்பு நீதிமன்றத் தில் கடந்த 13-ம் தேதி வரை ஒரு வாரம் சாட்சியம் அளித்தார்.
இதுதொடர்பான விசாரணை சிறப்பு நீதிபதி ஜி.ஏ.சனாப் முன்னிலையில் நேற்று நடந்தது.அப்போது, ஹெட்லியை நான்கு நாட்கள் குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாக, அபு ஜுண்டால் தரப்பு வழக்கறிஞர் அப்துல் வஹாப் கான் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ‘வரும் 25-ம் தேதி முதல் ஹெட்லியிடம் 2வது சுற்று சாட்சியம் பெறுவது தொடர்பாக அமெரிக்க அதிகாரி களிடம் பேச்சு நடத்தும்படி’ அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வல் நிகாமுக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஹெட்லியின் நேரம் கிடைப்பதைப் பொறுத்து, சாட்சியத்துக்கான நாள் நிர்ணயம் செய்யப்படும்.
இதனிடையே, அபு ஜுண்டால் தரப்பு வழக்கறிஞர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், இவ் வழக்கில் ஹெட்லியை அப்ரூவ ராக ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித் தார். தவிர, சில குறிப்பிட்ட ஆவணங்கள், சிடி-க்களை பார்ப்பதற்கு அனுமதி கோரினார்.
ஹெட்லி தன் முதல் சுற்று சாட்சியத்தில், ஐஎஸ்ஐ தொடர்பு, அல்காய்தா, லஷ்கர் இ தொய்பா தொடர்புகள், இஸ்ரத் ஜஹான், மும்பை தாக்குதலுக்காக வேவு பார்த்தது குறித்து வாக்குமூலம் அளித்திருந்தார்.