சாதிவாரி  மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிரதமர் மோடியுடன் நிதிஷ்குமார் இன்று சந்திப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி விவரங்களையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வரும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளார்.

நாட்டில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அப்போது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் கோரி வருகின்றன. இதனிடையே, மக்கள்தொகை கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு மக்களைத் தவிர வேறு பிரிவு மக்களைச் சாதிவாரியாகக் கணக்கிடக் கூடாது என்று கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அண்மையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதற்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பிஹாரின் எதிர்கட்சியான ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கருத்து கூறியுள்ளார்.

கால்நடைதீவன வழக்கில் தண்டனை அடைந்த லாலு, சமீபத்தில் ஜாமீனில் விடுதலையாகி மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ள அவர் இதுபற்றி கூறுகையில் ‘‘2021 மக்கள் தொகை கணக்கெடுப்பையும் சாதிவாரியாக நடத்த வேண்டும், அப்படி நடத்தவில்லை எனில் மக்கள் தொகை கணக்கெடுப்பை புறக்கணிப்போம்’’ எனக் கூறினார்.

லாலுவின் அரசியல் எதிரியும், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளவருமான பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘சாதிவாரியான கணக்கெடுப்பு என்பது நாட்டில் ஒரு மிக முக்கியமான பிரச்சினையாகும். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசவுள்ளேன். பிரதமருடனான சந்திப்புக்காக ஏற்கெனவே பல தலைவர்கள் டெல்லிக்குச் சென்றுவிட்டனர். என்னுடன் சிலர் வருகின்றனர்’’ எனக் கூறினார். நிதிஷ்குமார் தலைமையிலான குழுவில் பாஜக தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in