Published : 23 Aug 2021 10:40 AM
Last Updated : 23 Aug 2021 10:40 AM

இந்தியாவில் அக்டோபரில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம்: பிரதமர் அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு

இந்தியாவில் வரும் அக்டோபரில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என எச்சரித்து பிரதமர் அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் (National Institute of Disaster Management NIDM) சார்பில் இந்த அறிக்கை பிரதமர் அலுவகத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் தொடங்கிய கரோனா இரண்டாவது அலை பேரிழப்புகளை ஏற்படுத்தியது. அன்றாட பாதிப்பு 4.5 லட்சத்தையும் கடந்து சென்றது. இந்நிலையில், தற்போது படிப்படியாக கரோனா பாதிப்பு குறைந்துவருவதால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் வரும் அக்டோபரில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என எச்சரித்து, மத்திய உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் பிரதமர் அலுவலகத்தில் ஓர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில், மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், வெண்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை தடுப்பூசித் திட்டத்தில் குழந்தைகள் சேர்க்கப்படாததால், மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து பல்வேறு வகையில் ஆராய்ந்து வருவதாக நிபுணர் குழு கூறியுள்ளது. அதேவேளையில், குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு வார்டுகளை தயார்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.

மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் தொட்டாலும் கூட அதன் தாக்கம் ஏப்ரல், மே, தொடங்கி ஆட்டிப்படைத்த இரண்டாவது அலையைவிட பாதி அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கணிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 3,24,49,306 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை கரோனாவால் 4,34,756 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை, 58,25,49,595 பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x