Published : 23 Aug 2021 03:12 AM
Last Updated : 23 Aug 2021 03:12 AM

ஆந்திர மாநிலத்தில் நாட்டிலேயே மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தொடக்கம்

புதுடெல்லி

ஆந்திர மாநிலத்தில் நாட்டிலேயே மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் உற்பத்தி கழகம் (என்டிபிசி) சிம்ஹாத்ரி நீர் தேக்கத்தில் 25 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நீர் தேக்கமானது விசாகப் பட்டினத்தில் உள்ள அனல் மின் நிலையத்துக்குத் தேவையான நீரை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.

மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையமானது இத்தகைய மின் உற்பத்தி திட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை, வளர்ச்சியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலப் பரப்பில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதிலிருந்து நிலவும்இடப் பற்றாக்குறையை இத்தகைய மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்கள் மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாய நிலங்கள் அல்லாத, காடுகள் இல்லாத பகுதியாக தேர்வு செய்யப்பட்டு அங்குதான் சூரிய மின் உற்பத்தி தகடுகளை நிறுவ முடிகிறது. அதேசமயம் இத்தகைய மிதக்கும் மின் உற்பத்தி நிலையத்துக்கு சூரிய மின் தகடுகளை நீரின் மேற்பரப்பில் நிறுவும்போது தண்ணீர் ஆவியாவது குறையும் அத்துடன் பராமரிப்பு செலவும் குறைவு என்று இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சிம்ஹாத்ரி நீர்தேக்கத்தில் 75 ஏக்கர்பரப்பில் சூரிய மின் தகடுகள் மிதக்க விடப்பட்டுள்ளன. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் 7 ஆயிரம் குடியிருப்புகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைக்கும். இதனால் ஆண்டுதோறும் 46 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்படுவதால் வெளியாகும் கரியமில வாயு அளவு தவிர்க்கப்படும். மேலும் 136 கோடி லிட்டர் தண்ணீர் செலவாவது குறையும். இதன் மூலம் 6,700 குடியிருப்புகளுக்கு தண்ணீர் விநியோகிக்க முடியும்.

அனல் மின் உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி தற்போது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத மின் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. 2032-ம் ஆண்டுக்குள் 60 கிகா வாட் மின்சாரத்தை மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மின் உற்பத்தி தடைப்படும்போது ஜெனரேட்டர் மூலம் அதை ஈடுகட்டுவதற்கு பதிலாக நெகிழ்வுத் தன்மை திட்டத்தின் மூலம் மாற்று ஏற்பாடாக சூரிய ஆற்றல் மூலமாக மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் ராமகுண்டம் அனல் மின் நிலையத்தில் உள்ள நீர்தேக்கத்தில் 100 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளையும் என்டிபிசி மேற்கொண்டுள்ளது.

ஒடிஷா மாநில நிறுவனமான கிரீன் எனர்ஜி மேம்பாட்டு கார்ப்பரேஷன் நிறுவனம் என்டிபிசியுடன் ஒப்பந்தம் செய்து, மாநிலத்தில் சிறிய நீர்தேக்கத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. மிதக்கும் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை படிப்படியாக நிறைவேற்ற ஒடிஷா மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x