

கர்நாடகாவில் உள்ள மாவட்ட, வட்ட அளவிலான உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறு கிறது. கடந்த 13-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கடந்த 13-ம் தேதி பெங்களூரு, பெங்களூரு ஊரகம், ராம் நகர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து நாளை மைசூரு, சிக்கமகளூரு, தட்க்ஷின கன்னடா, ஹாசன், குடகு, உடுப்பி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் உள்ள 370 மாவட்ட பஞ்சாயத்து இடங்களுக்கும் வட்ட அளவில் ஆயிரத்து 939 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அந்தப் பகுதிகளில் ஆளும் காங்கிரஸ் சார்பில் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர், அமைச்சர்கள், நடிகை ரம்யா உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இதேபோல பாஜக சார்பாக அக்கட்சியின் கர்நாடக தலைவர் பிரகலாத் ஜோஷி, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கிராமம் தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முக்கிய தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து வாக்குப்பதிவு நடைபெறும் 15 மாவட்டங்களில் 17 ஆயிரத்து 698 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 3 ஆயிரத்து 626 வாக்குச்சாவடிகள் அதிக பதற்றம் நிறைந்தவை என கண்டறியப்பட்டிருப்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு வருகிற சனிக்கிழமை காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து 2 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வருகிற 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் முடிந்த கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்ததால் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தனது நற்பெயரையும் கட்சியின் செல்வாக்கையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் சித்தராமையா இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.