

உத்தர பிரதேச மாநிலத்தில் காசி எனும் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் வளாகத்தில் ஷ்ருங்காரக் கவுரி மாதா கோயில் உள்ளது. இது கியான்வாபி மசூதியை ஒட்டி அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் 6, 1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து ஷ்ருங்காரக் கவுரிக்கான பூஜைகள் நிறுத்தப்பட்டன. இந் நிலையில், வாரணாசியில் ஓர் இந்து அமைப்பினர் அந்நகர சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளனர்.
மனுவில், ‘‘கியான்வாபியை ஒட்டியிருப்பதால் பூஜை, புனஸ் காரங்கள் இன்றி சிக்கியுள்ள கவுரியை விடுவிக்க வேண்டும். மற்ற கோயில்களை போல் தரிசனத்துடன் பூஜைகளுக்கு அனுமதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த மனுவை வாரணாசியின் சிவில் நீதிமன்றம் 2 நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு ஏற்றது. தொடர்ந்து உத்தர பிரதேச அரசு, காசி விஸ்வநாதர் மற்றும் கியான்வாபி மசூதி ஆகியவற்றின் நிர்வாகக் குழுக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர்கள் குழுவை அமைக்கும்படியும் வாரணாசி மண்டல ஆணையருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முகலாயப் பேரரசர் அவுரங்க சீப்பால் காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டதாகப் பல வருடங்களாக ஒரு புகார் உள்ளது. அக்கோயில் இருந்த இடத்தின் ஒரு பகுதியில் கியான்வாபி மசூதியையும் அவுரங்கசீப் கட்டிய தாகக் கருதப்படுகிறது. இதனால், அயோத்தியில் நிலவிய பாபர் மசூதி-ராமர் கோயில் விவகாரத்தை போன்று இது மாறியது. மசூதியை இடித்து அந்நிலம் கோயிலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.
பல வருடங்களாகத் தொடர்ந்த இவ்வழக்கு இந்து, முஸ்லிம் தரப்பினர் இடையே சமாதானம் ஏற்பட்டு முடிவிற்கு வரும் நிலையை எட்டியுள்ளது. இதற்கு சமீபத்தில் மசூதி நிர்வாகத்தினர் தரப்பில் 1,700 சதுர அடி நிலம் கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்டதும் ஒரு காரணம். இதற்கு நன்றி செலுத்தும் வகையில் காசி விஸ்வநாதரர் கோயில் சார்பிலும் மசூதிக்காக தனது 1,000 சதுர அடி நிலம் தானமாகவும் அளிக்கப்பட்டுள்ளது. இச்சுழலை தகர்க்கும் முயற்சியில் வாரணாசி நீதிமன்றத்தில் இந்த புதியவழக்கு தொடுக்கப்பட்டிருப்பதா கக் கருதப்படுகிறது.