

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தங்கள் கட்சிக்கு மீண்டும் சைக்கிள் சின்னம் கோரி வரும் நிலையில், இது தொடர் பாக தேர்தல் ஆணையம் அடுத்த வாரத்தில் இறுதி முடிவு எடுக்க விருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 1996-ம் ஆண்டு வாசனின் தந்தையான ஜி.கே.மூப்பனாரால் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) தொடங் கப்பட்டது. இக்கட்சி மீண்டும் காங்கிரஸுடன் இணைக்கப் பட்டபோது முறையாக கலைக்கப் படாமல் விடப்பட்டது. இதன் பலனாக, மீண்டும் கட்சி தொடங்க முயன்ற வாசனுக்கு பழைய தமாகா கிடைத்தது. ஆனால், முறையாக கலைக்கப்படாமல் இருந்த தமாகா, இடைப்பட்ட தேர்தல்களில் போட்டியிடாததால் வாசனுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வாசன் மீண்டும் தமாகா.வை தொடங்கியபோது ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகு திக்கு இடைத்தேர்தல் வந்தது. சின்னம் கிடைப்பதில் உள்ள சிக்கல் காரணமாகவும் இத்தேர் தலில் போட்டியிடுவதை தமாகா தவிர்த்துவிட்டதாக கூறப்பட்டது.
தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமாகா.வின் தேர்தல் சின்னம் பற்றி முடிவு எடுக்கவேண்டிய கட்டாயம் மத்திய தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சின்னம் தொடர்பாக வாசனின் மனுக்களை ஆராய்ந்து வரும் தேர்தல் ஆணையம் அடுத்த வாரத்தில் இறுதி முடிவு எடுத்து அறிவிக்கை வெளியிட உள்ளது.
ஒரு மாநில கட்சியின் சின்னத்தை வேறு எந்த மாநில கட்சிக்கும் இனி ஒதுக்குவதில்லை என தேர்தல் ஆணையம் கடந்த 1997-ல் முடிவு செய்தது. எனினும் தமாகா இதற்கு முன்னரே தோன்றிய கட்சி என்பதால் பழைய சின்னத்தை மீண்டும் அளிப்பதில் எந்த தடையும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆகிய மாநில கட்சிகளும் சைக்கிளை தேர்தல் சின்னமாக பயன்படுத்தி வருகின்றன. இந்தக் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி தமிழகத்தில் வரும் தேர்தலில் போட்டியிட்டாலும் தமாகா.வுக்கு பழைய சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும்.
எனவே தமாகா.வுக்கு சைக்கிள் ஒதுக்குவதில் சட்ட சிக்கல் வந்துவிடாமல் இருக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே எதிர்வரும் தமிழக தேர்தலில் சுமார் 50 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதனால் சைக்கிள் சின்னம் கிடைக்காமல் போனால் உடனே நீதிமன்றம் செல்லவும் வாசன் கட்சியினர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
உ.பி.யின் பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தை அசாமின் அசாம் கன பரிஷத், தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் நாகாலாந்தின் ஒரு கட்சியும் பயன்படுத்தி வந்தன. கடந்த 1997-ல் பகுஜன் சமாஜ், தேசிய கட்சி அந்தஸ்து பெற்றது. இதனால் அக்கட்சியின் சின்னமான யானையை பிற மாநில கட்சிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அப்போது இந்தப் பிரச்சினையை பேசித் தீர்க்குமாறு 4 கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதுபோல் தமாகாவுக்கு சைக்கிள் வழங்குவதில் தற்போது சிக்கல் எழுந்தால் அதை மற்ற கட்சிகளுடன் பேசித் தீர்த்துக்கொள்ளூம்படி தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்க வாய்ப்புள்ளது.