Published : 21 Aug 2021 10:49 PM
Last Updated : 21 Aug 2021 10:49 PM

குழந்தைக்குப் பால் கிடைக்கவில்லை: காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்தியப் பெண்ணின் வேதனைப் பகிர்வு

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இந்திய விமானத்துக்காக காத்திருக்கும் ஓர் இளம் தாயின் அவலநிலையை டெல்லியில் உள்ள அவரது தாயார் தனியார் தொலைக்காட்சியிடம் பகிர்ந்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த அந்தப் பெண் தனது மகள் காபூலில் எதிர்கொண்டுள்ள சிக்கலான சூழலை கண்ணீர் மல்க விவரித்துள்ளார். அவர் கூறியதாவது: எனது மகள் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் அங்கிருந்து முதலில் எனது மகளும், பேரனும் மட்டும் வெளியேறுமாறு மருமகன் கூறினார்.

அதனால் அவரும் காபூல் விமானநிலையத்துக்கு வந்தார். இரண்டு நாட்களாக அவர் அருகிலிருந்த திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்போது, இந்திய விமானம் வந்துள்ளதாக கூறப்பட்டதால் அனைவரும் ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டனர். ஆனால் விமான நிலையம் வரும் வழியில் தலிபான்கள் அவர்களைத் தடுத்தி நிறுத்திவிட்டனர். முதலில் சென்ற வாகனத்தில் இருந்த 80 பேர் விமானநிலையம் அடைந்தனர். அடுத்ததாக வந்த வாகனத்தில் இருந்த எனது மகள் உட்பட 150 பேர் தலிபான்கள் விசாரணை வளையத்துக்குள் சென்றுவிட்டனர். பின்னர் அவர்களை விமானநிலையம் செல்ல தலிபான்கள் அனுமதித்தனர். அதனால் அவர்கள் விமானநிலையம் வந்தனர். ஆனால் அதற்குள் 80 பேருடன் விமானம் புறப்பட்டுச் சென்றுவிட்டது.

இப்போது எனது மகள் மீண்டும் காத்திருக்கிறார். அங்கே அவருக்கு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. எனது பேரனுக்கு பால் கிடைக்கவில்லை என்று வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.

இதற்கிடையில் 80 இந்தியர்களுடன் ஆப்கனிலிருந்து புறப்பட்ட இந்திய விமானம் நாளை காலை தலைநகர் டெல்லி வந்து சேரும் எனத் தெரிகிறது.

முதலில் 140, இப்போது 80, காத்திருப்போர் எண்ணிக்கை தெரியவில்லை:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் அந்நாட்டை தலிபான்கள் மீண்டும் கைபற்றியுள்ளனர். அங்கிருந்த இந்திய தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் 140 பேர் மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டனர். நாளை காலை (ஆக.22) 80 இந்தியர்கள் வரவுள்ளனர்.

எனினும் ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக காபூலில் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர்கள் இந்தியா அழைத்து வரப்பட தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியா, அமெரிக்காவின் உதவியையும் நாடியது. காபூல் நகரம் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் விமான நிலையம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x