

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி விடலாம் என மத்திய அமைச்சர் ஷோபா ஷோபா கரண்ட்லாஜே கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இந்நிலையில், தலிபான்கள் தங்கள் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடுகிறார்கள் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஷபிக்குர் ரஹ்மான் பர்க் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் மீது உ.பி. போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை பாஜக தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.
இந்தநிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பாஜகவினரையும் மத்திய அரசையும் கண்டித்து பேசினார். அவர் கூறியதாவது:
இந்தியாவில் 5-வயதுக்குட்பட்ட 9 பெண் குழந்தைகளில் ஒன்று இறந்து விடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் தினம் தினம் நடைபெறுகின்றன. ஆனால் மத்திய அரசுக்கு இதை பற்றி கவலையில்லை. ஆனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கொல்லப்படுவதாக இங்கே சிலர் முதலை கண்ணீர் வடிக்கிறார்கள், மத்திய அரசு கவலைப்படுகிறது. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடக்கவில்லையா.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலடியாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி விடலாம் என மத்திய அமைச்சர் ஷோபா ஷோபா கரண்ட்லாஜே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பெண்களின் பாதுகாப்பு பற்றி ஒவைசி அதிகமாகவே பேசுகிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களையும் அங்குள்ள மக்களையும் காக்க ஒவைசியை அங்கு அனுப்பி விடலாம்’’ எனக் கூறியுள்ளார்.