

உத்தரப்பிரதேசத்தில் கூடுதலாக 10 மாவட்டங்களில் தீவிரவாத எதிர்ப்பு படையின் (ஏடிஎஸ்) 12 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. இது ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை பிடித்ததன் தாக்கம் எனக் கருதப்படுகிறது.
உ.பி.யில் கடந்த 2007 இல் தீவிரவாதத்தை ஒடுக்க ஏடிஎஸ் அமைக்கப்பட்டது. பாஜக ஆளும் உ.பி.யில் தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதில் ஏடிஎஸ் பெரும் பங்கு வகிக்கிறது.
தற்போது இதன் கமாண்டோக்கள் கொண்ட முகாம்கள் மாநிலம் முழுவதிலும் ஆறு உள்ளன. இவற்றில் காஜியாபாத், வாரணாசியில் தலா ஒன்றூம், தலைநகரான லக்னோவில் 4 முகாம்களும் அமைந்துள்ளன.
முதல்வர் யோகியின் ஆட்சியில் இப்படையினர் சார்பில் இதுவரை 69 தீவிரவாதிகள் என கைது செய்யப்பட்டுள்ளனர். கடைசியாக கடந்த ஜனவரி 16 இல் கைதான 18 குற்றவாளிகளில் மூன்று பேர் சீனாவை சேர்ந்தவர்கள்.
இவர்கள், ஐஎஸ்ஐஎஸ், ஹிஜுபுல் முஜாகித்தீன், ஜெய்ஷ்-எ-முஹம்மத், பாபர் கல்சா, ஜேஎம்பி மற்றும் வங்க தேசத்தின் ஏபிடி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள்.
இதுவன்றி, உ.பி.யிலுள்ள நேபால் நாட்டின் எல்லையில் 216 பேர்களை பல்வேறு குற்றங்களில் ஏடிஎஸ் கைது செய்துள்ளது. இவர்கள், ஐஎஸ்ஐஎஸ் மற்றும் நக்சலைட்டுகள் உள்ளிட்டோருக்கு உதவியவர்கள்.
கள்ளநோட்டுக்களை உ.பி.யில் ஊடுருவ முயற்சித்தவர்களும் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை தடுக்கும் பணியில் உள்ள ஏடிஎஸ் ஊக்குவிக்கும் வகையில் அதன் மேலும் 12 முகாம்கள் உபியில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில், ஏடிஎஸ் கமண்டோக்களின் பயிற்சி நிலையங்களும் அடங்கும். இவை, உபியில் மதக்கலவர ரீதியாகப் பதற்றமுள்ள நகரங்கள் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளன.
மீரட், அலிகர், கான்பூர், தியோபந்த், ஆஸம்கர், சோன்பத்ர், கிரேட்டர் நொய்டா, பைரைச், மீர்சாபூர், ஸ்ராவஸ்தி உள்ளிட்ட 12 நகரங்களில் அமைக்கப்பட உள்ளன. இதற்கான நிலங்களை ஒதுக்கி அவற்றில் உபி அரசு சார்பில் கட்டிடங்களும் கட்டப்பட உள்ளன.
இந்நிலையில், சஹரான்பூரில் மாவட்டத்திலுள்ள தியோபந்தில் ஏடிஎஸ் முகாம் அமைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதரஸாக்கள் நிறைந்த இந்த நகரில் உலகப் புகழ்பெற்ற பழமையான தாரூல் உலூம் மதரஸாவும் அமைந்துள்ளது.
இதனால், மதரஸாக்கள் நகரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அங்கு ஏடிஎஸ் முகாம் அமைக்கப்படுவதாக அதன் மவுலானாக்கள் தரப்பிலிருந்து புகார் எழும்பி உள்ளது.
இது குறித்து முதல்வர் யோகியின் செய்தி ஆலோசகரான ஷலாப் மணி திரிபாதி தனது டிவிட்டர் பதிவில், ‘தலிபான்களின் காட்டுமிராண்டித்தனத்திற்கு இடையே, உபியில் ஒரு முக்கிய செய்தி வெளியானது. தியோபந்தில் ஏடிஎஸ் கமாண்டோக்களின் பயிற்சி முகாமை துவக்க யோகிஜி முடிவு செய்துள்ளார்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய முகாம்களுக்கான அறிவிப்பு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை பிடித்ததைத் தொடர்ந்து வெளியாகி உள்ளது. எனவே, அதன் தாக்கமாக உ.பி.யில் தீவிரவாத நடவடிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்த்து இந்த புதிய முகாம்கள் அமைக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.