

தேச துரோக வழக்கில் கைதான ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் தனது உயிருக்கு அச்சுறுத் தல் இருப்பதால் உடனடியாக ஜாமீன் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தில் முறையிட்டு மனுதாரர் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டு, அவரது மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியது. அத்துடன் கண்ணய்யா குமார் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கும், டெல்லி போலீஸாருக் கும் உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் போலீஸாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே கண்ணய்யா குமாரின் ஜாமீன் மனுவை அவரது வழக்கறிஞர்கள் சுஷில் பஜாஜ் மற்றும் விருந்தா குரோவர் நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தின் பதிவாளரிடம் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை தேதி முடிவு செய்யப்படவில்லை.
கண்ணய்யா படுகாயம்
கடந்த புதன்கிழமை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கண்ணய்யா குமார் ஆஜர்படுத்தப்பட்டபோது, அங்கிருந்த வழக்கறிஞர்கள் சிலர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் கண்ணய்யாவில் இடது கால் பாதம், மூக்கு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதலை டெல்லி போலீஸ் ஆணையர் பி.எஸ்.பாஸி மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘கண்ணய்யா குமாருக்கு போலீ ஸார் சார்பில் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பாட்டியாலா நீதிமன்றத்தில் அவர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. கல்வீச்சு சம்பந்தமாக எழுந்த புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்’’ என்றார்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தலைமையில் ஆறு இடதுசாரி கட்சிகளின் கூட்டம் நடந்தது. அப்போது வரும் 23-ம் தேதியில் இருந்து 25-ம் தேதிக்குள் இப்பிரச்சினையை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து சீதாராம் யெச்சூரி கூறும்போது, ‘‘பொய்யான குற்றச்சாட்டுக்கள் அடிப்படை யில் ஆர்எஸ்எஸ்ஸும், பாஜகவும் இந்திய மக்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியுள் ளன. எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என முத்திரை குத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட் டுள்ளன. இப்பிரச்சினையை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய் துள்ளோம்’’ என்றார். பிஹார் முதல்வர் நிதீஷ்குமார், ஆர்ஜேடி தலைவர் லாலு ஆகியோரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.