

காஸியாபாதில் உள்ள பெயர் பெற்ற தனியார் கல்லூரி ஒன்றில் காஷ்மீர் மாணவரை சீனியர் மாணவர்கள் சிலர் அடித்து உதைத்துள்ளனர்.
கல்லூரி ஹாஸ்டலில் உள்ள குளியலறையில் அவர் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. உடனே மாணவர் அலறியுள்ளார். இது சீனியர் மாணவர்கள் சிலரை எரிச்சல் படுத்த அந்த மாணவரை கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்.
பீர் ஓமர் என்ற இந்த மாணவருக்கு வயது 22, இந்தக் கல்லூரியில் பிசிஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
அடித்த மாணவர்கள் பி.டெக் 2ஆம், மற்றும் 3ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்கள்.
இந்தச் சம்பவத்தையடுத்து அதே கல்லூரியில் படிக்கும் சுமார் 100 காஷ்மீர் மாணவர்கள் ஆர்பாட்டத்தில் குதித்தனர்.
பீர் ஓமரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த காவல்துறை, மூத்த மாணவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை விசாரிக்க கல்லூரி நிர்வாகம் 12 நபர் உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாடியதற்காக ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் சிலர் பல்கலைக் கழகம் ஒன்றில் தாக்கப்பட்டதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.