

12 வயதுக்கு மேற்பட்டோருக்கான இந்தியாவின் முதல் கரோனா தடுப்பூசி ஜைக்கோவ்-Dக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கெனவே சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாசின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V , அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், ஆறாவதாக ஜைடஸ் கேடில்லா நிறுவனம் தனது தயாரிப்பான மூன்று டோஸ் கொண்ட தடுப்பூசிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்தத் தடுப்பூசிக்கு அவசகால பயன்பாட்டிற்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளது.
முன்னதாக இந்த நிறுவனம் கடந்த ஜூலை 1 ஆம் தேதியன்று அனுமதி கோரி விண்ணப்பித்தது. இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட மையங்களில் தங்களின் மூன்று டோஸ்கள் கொண்ட தடுப்பூசியை விரிவாக பரிசோதனை செய்துவிட்டதாக ஜைடஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஒருவேளை ஜைக்கோவ்-D மருந்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதால், இந்திய மருந்து நிறுவனம் தயாரிக்கும் உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
3 டோஸ் கொண்டது:
ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி 3 டோஸ்களைக் கொண்டது. முதல் டோஸ் எடுத்துக்கொண்டபின் 28வது நாளில் 2-வது டோஸும், 56-வது நாளில் 3-வது டோஸ் செலுத்த வேண்டும். நீடில்லெஸ் தொழில்நுட்பத்தில் இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
ஊசியில்லா தடுப்பூசி:
அதாவது, ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில்(hypodermic needle) மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படும்
இந்த தடுப்பூசி, மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பத்துறையின் கீழ்வரும்,உயிர்தொழில்நுட்பம் தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை பாதுகாத்து நீண்ட காலத்துக்கு பயன்படுத்த முடியும், 25 டிகிரி செல்சியஸ்வரை வைத்து, குறுகிய பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்.
இது குறித்து கேடில்லா ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷார்வில் படேல் கூறும்போது, ஜைடஸ் கேடில்லா பெரியவர்களுக்கு மட்டுமல்ல 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் உகந்ததாக அமையும் என்றார்.