

இந்தியக் கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சித்துறைதான் கடந்த ஜூலை மாதத்தில் அதிகமான சைபர் தாக்குதல்களைச் சந்தித்துள்ளது. ஒவ்வொரு அமைப்பும் வாரத்துக்கு சராசரியாக 5,196 தாக்குதல்களைச் சந்தித்துள்ளதாக பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
சைபர் தாக்குதல்கள் குறித்த ஆய்வுகளை நடத்திய செக் பாயின்ட் எனும் நிறுவனம் இந்த ஆய்வை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ''பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் இதற்கு முன்பு இல்லாத அளவு சைபர் தாக்குதலுக்கு ஆளாகியதால், 2021-ம் ஆண்டின் முதல் பாதியில் இந்தத் தாக்குதல்கள் 22 சதவீதம் அதிகமாகும்.
உலக அளவில் ஆன்லைன் தாக்குதல்களைப் பெருந்தொற்றுக் காலத்தில் சந்தித்தவையாக கல்வித்துறையும், ஆராய்ச்சித் துறையும் உள்ளன. ஒவ்வொரு அமைப்பும் வாரந்தோறும் சராசரியாக 1,739 சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்தத் தாக்குதல்கள் 30 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவுக்கு அடுத்து கல்வித்துறையில் அதிகமான சைபர் தாக்குதல்களைச் சந்தித்தது இத்தாலி. இந்த ஆண்டின் முதல் பாதியில் அங்கு சைபர் தாக்குதல்கள் 70 சதவீதம் அதிகரித்துள்ளன. அடுத்ததாக இஸ்ரேலும், ஆஸ்திரேலியாவும் உள்ளன.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும், ஆராய்ச்சிப் படிப்புகளுக்கும் மாணவர்களால் நேரடியாகச் செல்ல முடியவில்லை. இதனால் வீட்டிலிருந்தே கல்வி பயில்வது, பணியாற்றுவது என்று வாழ்வில் மாற்றம் வந்துவிட்டது. இதனால் பல்வேறு கல்வி அமைப்புகளும், நிறுவனங்களுக்கும் இந்தப் பெருந்தொற்றுக் காலத்துக்கு ஏற்பத் தங்களின் கட்டமைப்பையும் மாற்றிக்கொண்டனர்.
ஆனால், கல்வித்துறையில் உள்ள பள்ளிகள், பல்கலைக்கழங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் இதற்குமுன் இதுபோன்ற சைபர் தாக்குதல்களைச் சந்தித்தது இல்லை எனத் தெரிகிறது.
உலக அளவில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், கல்வித்துறையும், ஆராய்ச்சித் துறையும்தான் அதிகமான சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன. 94 சதவீதத் தாக்குதல்கள் இந்தத் துறைகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.
தெற்காசியாவில் அதிகமான சைபர் தாக்குதல்கள் கிழக்கு ஆசியாவிலும் அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூஸிலாந்திலும் நடக்கின்றன. அடிக்கடி பாஸ்வேர்டுகளை மாற்றுவது, வைரஸ் வராமல் தடுக்கும் மென்பொருள் பயன்படுத்துவது, தனியாரின் தகவல்களைப் பயன்படுத்தும் போது கவனத்துடன் இருத்தல் போன்றவை சைபர் தாக்குதலில் இருந்து நம்மைக் காக்க முடியும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.