வெளிநாட்டு மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத் தேர்வு: பாக். உட்பட பல நாடுகளில் நடக்கிறது

வெளிநாட்டு மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத் தேர்வு: பாக். உட்பட பல நாடுகளில் நடக்கிறது
Updated on
1 min read

அடுத்த ஆண்டுமுதல் வெளி நாட்டு மாணவர்களை ஐ.ஐ.டி.யில் சேர்ப்பதற்கான நுழைவுத்தேர்வை பாகிஸ்தான் உட்பட சார்க் நாடுகளில் நடத்த மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.

மத்திய மனித ஆற்றல் மேம் பாட்டுத் துறை மற்றும் வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகள் பங் கேற்ற உயர்நிலைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்க முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி அடுத்த ஆண்டு முதல் வெளிநாடுகளிலும் ஐஐடி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம், பூடான், மாலத்தீவு, வங்கதேசம் ஆகிய சார்க் நாடுகள் மற்றும் சிங்கப்பூர், துபை ஆகிய நாடுகளில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இதற்கு முன்பு வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஐஐடி நுழைவுத் தேர்வு மூலம் இந்திய குடியுரிமை பெற்ற மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.

முதல்முறையாக வெளிநாட்டு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி வரும் 2017-ம் ஆண்டில் வெளிநாடுகளில் ஜேஇஇ/கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் தற்போது 18 ஐஐடி கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் வெளிநாட்டு மாணவர்கள் எத்தனை பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in