

ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு எழுதினார்.
86 வயதான சவுதாலா, சிர்சா நகரில் உள்ள ஆர்ய கன்யா சீனியர் செகன்டரி பள்ளியில் இத்தேர்வை எழுதினார். கையில் எலும்பு முறிவு இருப்பதால், தேர்வு எழுத உதவியாளர் ஒருவர் வேண்டும் என கோரினார். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் 2 மணி நேரத்தில் அவர் தேர்வு எழுதிவிட்டு அங்கிருந்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹரியாணா மாநிலத்தில் 4 முறை முதல்வராக இருந்தவர் ஓ.பி.சவுதாலா. இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவரான இவர், முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன் ஆவார். ஹரியாணாவில் ஆசிரியர் நியமனத்தில் நடந்த ஊழல் வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில் இவருக்கு சிபிஐ நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ததை தொடர்ந்து, கடந்த 2013 முதல் டெல்லி திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இவருடன் இவரது மகன் அபே சவுதாலா மற்றும் 53 பேர் தண்டனை அனுபவித்தனர்.
இந்நிலையில் இரண்டு மாத தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டு ஓ.பி.சவுதாலா கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
சவுதாலா சிறையில் இருந்தபோது, தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனம் மூலம் 10-ம் வகுப்பு படித்தார். இதில் கடந்த 2017-ல் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து 12—ம் வகுப்பு பாடங்களை படித்து வந்த சவுதாலா, ஹரியாணா திறந்தவெளி கல்வி வாரியம் மூலம் இந்த ஆண்டு அதற்கான தேர்வு எழுதினார். இதன் முடிவுகள் கடந்த 5-ம் தேதி வெளியாகின. எனினும் சவுதாலாவின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. கட்டாய 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வை இவர் இதுவரை எழுதவில்லை என இதற்கு காரணம் கூறப்பட்டது. இதையடுத்து 10-ம் வகுப்பு ஆங்கிலப் பாடத் தேர்வை நேற்று முன்தினம் அவர் எழுதினார்.