

தலிபான் தீவிரவாதிகளை ஆதரிப்பவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இந்நிலையில், தலிபான்கள் தங்கள் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடுகிறார்கள் என்றும் ஆப்கன்மக்களும் அவர்களின் தலைமையின் கீழ் இருக்க விரும்புகின்றனர் என்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஷபிக்குர் ரஹ்மான் பர்க் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் மீது உ.பி. போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் முஸ்லிம் தனிநபர் சட்டவாரிய செயலாளர் உம்ரைன் மஹ்பஸ் ரஹ்மானியும் தலிபான்கள் வெற்றி பெற்றதை வரவேற்று கருத்து கூறியிருந்தார்.
இந்நிலையில், உ.பி.சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, ‘‘தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சிலர் பேசுகின்றனர். ஆப்கானிஸ்தானில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தலிபான் தீவிரவாதிகள் கொடுமைகள் இழைக்கின்றனர். போராட்டம் நடத்தும் சொந்த நாட்டு மக்களையே தலிபான்கள் சுட்டுக் கொல்கின்றனர்.
ஆனால், இங்கே சிலர் வெட்கமே இல்லாமல் தலிபான் தீவிரவாதிகளை ஆதரிக்கின்றனர். தலிபான் தீவிரவாதிகளை ஆதரிப்பவர்களின் முகத்திரையை கிழிக்கவேண்டும். அவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும்’’ என்றார். - பிடிஐ