Published : 20 Aug 2021 06:39 AM
Last Updated : 20 Aug 2021 06:39 AM

ஆப்கனிலிருந்து இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி

ஷாஜாபூர்

ஆப்கானிஸ்தானில் இருந்து, இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதிபட தெரிவித்தார்.

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைப்பதற்காக மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாசுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனிடையே ஷாஜாபூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கரோனா பரவல் அதிகமாக இருந்த சமயத்தில், தாயகம் திரும்ப முடியாமல் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை இந்தியா அழைத்து வருவதற்கு 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

அதேபோல, தற்போது அசாதாரண சூழல் நிலவி வரும் ஆப்கானிஸ்தானில் இருந்து, இந்தியர்களை பத்திரமாக தாய்நாடு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும். ஏர் இந்தியா விமானத்திலோ அல்லது ராணுவ விமானத்திலோ அவர்கள் விரைவில் தாய்நாடு அழைத்து வரப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.- பிடிஐ

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x