Last Updated : 08 Feb, 2016 09:56 AM

 

Published : 08 Feb 2016 09:56 AM
Last Updated : 08 Feb 2016 09:56 AM

எல்லைப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஹெராயின் கடத்திய 4 பேர் சுட்டுக் கொலை

இந்தியாவுக்குள் ஹெராயின் போதை மருந்து கடத்த முயன்ற நான்கு பேரை எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) சுட்டுக் கொன்றனர்.

பஞ்சாப் மாகாணம், டார்ன் டரன் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்தது. “சுட்டுக் கொல்லப் பட்ட நால்வரில் இரண்டு பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், 2 பேர் இந்தியர்கள்” என பெரோஷ்பூர் பிரிவு எஸ்எஃப் டிஐஜி ஆர்.கே. தாபா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

எல்லை பாதுகாப்புப் படையின் 191-வது பட்டாலியன், பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் இருந்து 70. கி.மீ. தொலைவில் உள்ள மெந்திபூர் புற சோதனைச் சாவடி அருகில் நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லைத்தடுப்பு வேலி அருகே சிலர் நடமாடுவது தெரிய வந்தது.

பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் எல்லை வேலி அருகே வந்தனர். இந்திய தரப்பிலிருந்து 2 பேர், அவர்களிடமிருந்து பொருட்களைப் பெறுவதற்காக சென்றனர். அப்போது, ஊடுருவல்காரர்கள் எல்லை பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பின்னர், எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற தேடுதல் வேட்டையில் தலா ஒரு கிலோ எடையுள்ள 10 ஹெராயின் பொட்டலங்கள், சீனாவில் தயாரிக்கப்பட்ட 9 மி.மீ கைத்துப்பாக்கிகள் இரண்டு, ஒரு உள்நாட்டு துப்பாக்கி, 54 குண்டுகள், எல்லை வேலியை துண்டிப்பதற்கான கருவி, பாகிஸ் தான் பணம், பாகிஸ்தான் சிம் கார்டு கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x