

உத்தரப்பிரதேசத்தின் முக்கியக் கல்வி நகரமான அலிகர் பெயரை, ‘ஹரிகர்’ என மாற்றும் முயற்சி துவங்கியுள்ளது. இதன்மூலம், அம்மாநிலத்தில் பாஜகவின் பெயர்மாற்றும் அரசியல் தொடர்வதாகக் கருதப்படுகிறது.
உ.பி.யில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்ததிலிருந்து அம்மாநிலத்தில் பல முஸ்லிம் பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அலகாபாத் மாவட்டத்தை பிரயாக்ராஜ் எனவும், பைஸாபாத்தை அயோத்யா என்றும் பல பெயர் மாற்றங்கள் தொடர்கின்றன.
இந்தவகையில் டெல்லிக்கு அருகாமையில் உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள அலிகர் பெயரை ‘ஹரிகர்’ என மாற்றும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, அலிகரில் புதிதாக அமைந்த மாவட்டப் பஞ்சாயத்தின் முதல் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.
இதன், 72 உறுப்பினர்களில் 50 பேர் ஆஜராகி இருந்தனர். இக்கூட்டத்தில், அலிகர் நகரின் பெயரை ஹரிகர் எனவும், அதன் தனிபூர் பகுதியை உ.பி.யின் முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் பெயரிலும் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அலிகர் மாவட்ட பஞ்சாயத்து தலைவரான விஜய்சிங் கூறும்போது, ‘‘இந்த தீர்மானம் குரல்வாக்கெகெடுப்பில் ஏகமனதாக நிறைவேறியது.
இதன் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைக்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உ.பி.வாசிகளின் நீண்டகாலக் கோரிக்கையை இந்த பாஜக அரசு நிறைவேற்ற உள்ளது’’ எனத் தெரிவித்தார்.
மதக்கலவரத்திற்கு பெயர் போன நகரமான இங்கு அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் அமைந்துள்ளது. முஸ்லிம்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ள அலிகரை நீண்ட காலமாக ஹரிகர் எனப் பெயர் மாற்ற அவ்வப்போது பேச்சுகள் எழுவது உண்டு.
இந்நகரின் சில பாஜக நிர்வாகிகள் தங்கள் பதவியின் பெயருக்கு கீழ் நகரின் பெயரை ஹரிகர் என பல ஆண்டுகளாக தம் வாகனங்கள் மற்றும் குடியிருப்புகளில் குறிப்பிட்டு வருகிறார்கள்.
இதனிடையே, மெயின்புரி மாவட்டப் பஞ்சாயத்து கூட்டமும் அந்நகரின் பெயரை ’மாயன் நாகர்’ என மாற்றத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதற்கு முன் பெரோஸாபாத்தின் பெயரையும் ’சந்திரா நகர்’ எனும் மாற்றும் நடவடிக்கை துவக்கப்பட்டிருப்பதும் நினைவுகூரத்தக்கது.