

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு சமூக வலைதளங்கள் மூலம் ஆள் சேர்த்ததாக கேரளாவில் 2 பெண்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் டெலிகிராம், ஹூப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் ஆள் சேர்ப்பதாக புகார் எழுந்ததையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் கேரளாவில் 8 இடங்கள், பெங்களூருவில் 2 இடம், டெல்லியில் ஓரிடத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது அமீன் (எ) அபு யஹயா உள்ளிட்ட 3 பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த என்ஐஏ அதிகாரிகள், கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிஜா சித்திக் மற்றும் ஷிபா ஹாரிஸ் ஆகிய 2 பெண்களை நேற்று முன்தினம் காலையில் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் இணையவழியில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முகமது அமீன் வழிகாட்டுதலின் பேரில் இன்ஸ்டாகிராமில் இணைந்த மிஜா சித்திக், ஐஎஸ் அமைப்பு குறித்து பிரச்சாரம் செய்து, ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு பயணம் செய்ததும் தெரியவந்துள்ளது.