பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம்: நாட்டின் பாதுகாப்பு தகவலை அரசு வெளியிடத் தேவையில்லை- உச்ச நீதிமன்றம் கருத்து

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம்: நாட்டின் பாதுகாப்பு தகவலை அரசு வெளியிடத் தேவையில்லை- உச்ச நீதிமன்றம் கருத்து
Updated on
1 min read

பெகாசஸ் மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான எந்தத் தகவலையும் மத்திய அரசு வெளியிடத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடங்கியது. இதனிடையே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், அனிருதா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று முன்தினம் 2 பக்கம் கொண்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில்‘செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. ஆதாரங்கள் எதுவும் இல்லாத பத்திரிகை செய்திகள், ஊகங்கள் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்றுதெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுநல மனுக்கள் மீது மத்திய அரசு 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்தியஅரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘மனுதாரர்கள் கோரியபடி, பிரமாண பத்திரத்தில் தகவல்களை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது’’ என்றார். அதற்கு நீதிபதிகள், ‘‘நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்யும் எந்த தகவலையும் மத்திய அரசு வெளியிடத் தேவையில்லை’’ என்றுகூறி விசாரணையை ஒத்திவைத்தனர். -பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in