

பொய் கூறுவதையே வழக்கமாக கொண்டவர் ராகுல் காந்தி என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோரை சந்தித்துப் பேசிய புகைப்படத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். ட்விட்டரின் விதிகளுக்கு முரணாகவும் குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும் இந்தப் புகைப்படம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, ராகுலின் ட்விட்டர் கணக்கை கடந்த வாரம் ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. பின்னர் புகைப்படத்தை வெளியிட சிறுமியின் பெற்றோரிடம் பெற்ற அனுமதிகடிதத்தை ராகுல் சமர்ப்பிக்க,ட்விட்டர் நிறுவனம் அவரதுகணக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தது.
இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாஜக அலுவலகத்தை காணொலி மூலம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
பொய்கள் கூறுவதையே வழக்கமாகக் கொண்டவர் ராகுல் காந்தி. டெல்லி சிறுமி பாலியல் பலாத்கார விவகாரத்தை அரசியலாக்கி வருகிறார் ராகுல். அரசியல் லாபத்துக்காக இதுபோன்ற விஷயங்களை அவர் செய்து வருகிறார். மீண்டும் அவரது ட்விட்டர் கணக்கை அந்த நிறுவனம் முடக்க வேண்டும்.
கேரளாவில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கேரள அரசு தோல்வி கண்டுவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.-பிடிஐ