

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்ததால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 121.55 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 367 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் 3 அடிநீர் நிரம்பினால் அணை முழு கொள்ளளவை எட்டும் என்பதால், விநாடிக்கு 5,545 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து2,284 அடி உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,282.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 3,737 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 5,842 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்துதமிழகத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,387 கனஅடி நீர் மைசூரு, மண்டியா மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது.